ADDED : பிப் 22, 2025 07:00 AM
பல்லடம்; பல்லடம் செட்டிபாளையம் ரோடு, சி.டி.சி., காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 27; வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் பணி செய்து வருகிறார்.
பல்லடம் நால்ரோடு அருகே, தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாகனங்களுக்கு, சுப்பிரமணியம்தான் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி வருகிறார். இதற்கிடையே, வாகனம் ஒன்றின் ஜி.பி.எஸ்., இயங்கவில்லை என, சுப்பிரமணியத்திடம் வேலைவாய்ப்பு அலுவலக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இதை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், வழங்கிய பில் தொகையை திருப்பித் தருமாறு நிர்வாகிகள் கேட்டுள்ளனர். இதை சுப்பிரமணியம் ஏற்றுக் கொள்ளவில்லை.
நிர்வாகிகள், இவரை தனியாக வரவழைக்க திட்டமிட்டனர். இதன்படி, புதிதாக ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும் என, வேறொரு நபர் மூலம், சுப்பிரமணியத்தை கே.அய்யம்பாளையம் வரவழைத்தனர். இதன்படி, அய்யம்பாளையம் சென்ற சுப்பிரமணியத்தை, தனியார் இடத்தில் அடைத்து வைத்து, மொபைல்போன், வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், வாகனத்தில் ஜி.பி.எஸ்., பொருத்தி தரவேண்டும், இல்லையெனில், பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என, சுப்பிரமணியத்தை மிரட்டி எழுதி, கையொப்பம் வாங்கி கொண்டு, இரவு அனுப்பி வைத்துள்ளனர்.
உள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியம், காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த குமார் 45, ஷியாம், 33, சரவணன் 22, சதீஷ், 30 ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

