/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரளாவில் பின்னலாடை 'யூனிட்'! திருப்பூர் தொழில் துறையினர் உஷாராக வேண்டும்
/
கேரளாவில் பின்னலாடை 'யூனிட்'! திருப்பூர் தொழில் துறையினர் உஷாராக வேண்டும்
கேரளாவில் பின்னலாடை 'யூனிட்'! திருப்பூர் தொழில் துறையினர் உஷாராக வேண்டும்
கேரளாவில் பின்னலாடை 'யூனிட்'! திருப்பூர் தொழில் துறையினர் உஷாராக வேண்டும்
ADDED : மார் 08, 2025 11:03 PM
திருப்பூர்: கேரளாவில் புதிய யூனிட்டுகள் துவக்கி, செயற்கை நுாலிழை பின்னலாடை உற்பத்தியில் தொழில்முனைவோர் கால்பதிக்க துவங்கி விட்டனர்.
'டாலர் சிட்டி' எனப்படும் திருப்பூர் நகரப்பகுதியில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும், வர்த்தகமும் அபார வளர்ச்சி பெற்றது. இன்றும், நாட்டின் பின்னலாடை தொழிலின் தலைநகரமாக உள்ளது.
திருப்பூரில், நாளுக்கு நாள் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால், அரை நுாற்றாண்டு காலமாக, வர்த்தக தொடர்பில் இருந்த மாநிலங்கள், அங்கேயே பனியன் ஆடை உற்பத்தியை துவக்கிவிட்டன. குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு, கேரளாவில் சிறிய பனியன் ஆடை உற்பத்தி யூனிட்டுகள் திறக்கப்பட்டன.
திருப்பூரில் அனுபவத்தை பெற்ற தொழிலாளர், கேரளாவில் தொழில்முனைவோராக உயர்ந்துள்ளனர். திருப்பூரில் இருந்து, சாயமிடப்பட்ட செயற்கை நுாலிழை பின்னல் துணிகளை வாங்கி, எளிதாக ஆடை உற்பத்தி செய்கின்றனர்.
சாயமிடப்பட்ட செயற்கை நுாலிழை பின்னல் துணி கிடைப்பதால், ஆடை வடிவமைப்பு எளிமையாக மாறிவிட்டது. அதன் பயனை, இன்று கேரளா அனுபவிக்க துவங்கியிருக்கிறது. உடனடியாக, மாநில அரசும், அதிகாரிகளும் சிறப்பு கவனம் செலுத்தி, திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, 'சைமா' நிர்வாகிகள் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து தையல் இயந்திரங்களை மட்டும் வாங்கிச்சென்று, கேரளாவில் சிறிய யூனிட் துவக்கினர். செயற்கை நுாலிழை பின்னல் துணியை வாங்கி, ஆடையாக வடிவமைத்து, உள்ளூர் சந்தையில் விற்கின்றனர். இதனால், திருப்பூர் வந்து ஆடை கொள்முதல் செய்வது குறைந்துவிட்டது.
பருத்தி பின்னலாடைகளை காட்டிலும் தரம் குறைவாக இருந்தாலும், ஒரு ஆடை விலை, 25 ரூபாய் அளவுக்கு விலை குறைவாக கிடைப்பதால், கேரளாவில் விற்பனை சூடுபிடித்துள்ளது. கேரள மார்க்கெட் தொடர்பு, திருப்பூருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பூர் 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பின் இயக்குனர் 'வால்ரஸ்' டேவிட் கூறுகையில், ''வடமாநிலங்களில் உற்பத்தியாகும், சாயமிடப்பட்ட பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை பின்னல் துணி (பேப்ரிக்) விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூரிலும், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி துவங்கியுள்ளது. இருப்பினும், கேரளாவில், உற்பத்தி சூடுபிடித்து வளர்ந்து வருகிறது.
அம்மாநில முக்கிய சந்தைகளில் கால்பதித்துள்ளனர். கிலோ, 150 முதல் 400 ரூபாய் வரை, பனியன் துணி விற்கப்படுகிறது; கேரள தொழில்முனைவோர், 200 முதல், 250 ரூபாய் வரை மதிப்புள்ள துணிகளைஅதிகம் வாங்கி செல்கின்றனர்,'' என்றார்.