
தொழில் நகரான திருப்பூரில், பல்வேறு விளையாட்டுகளுக்கு உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இவை தடையாக இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இளம் வீரர், வீராங்கனையர் பலர், தேசிய, மாநிலப் போட்டிகளில் சாதித்துக்காட்டி வருகின்றனர். திருப்பூரில், விளையாட்டை மேம்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகளை, விளையாட்டு ஆர்வலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர்.
மைதானங்களும் போதாது; ஆசிரியர்களும் பற்றாக்குறை
ராமகிருஷ்ணன், பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும். 1 - 5ம் வகுப்பு வரை, மிக இளையோர் பிரிவு; 6 - 8ம் வகுப்பு வரை இளையோர் பிரிவு; 9 - 10ம் வகுப்பு வரை மூத்தோர் பிரிவு; 11, 12ம் வகுப்பு வரை மிக மூத்தோர் பிரிவு என வகைபடுத்தி பயிற்சி வழங்கினால், மாணவர்களின் திறமை மேம்படும். திருப்பூரில், சர்வதேச அளவிலான தடகள மைதானம் அமைக்க வேண்டும். மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த வேண்டும். தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், உடற்கல்வி ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பது, துரதிருஷ்டம். மைதானங்களே இல்லாத பள்ளிகள் கூட அதிகளவில் உள்ளன. இதற்கெல்லம் ஒரே தீர்வு, உடற்கல்வி மற்றும் நலக்கல்வி பாடத்தை பள்ளிக்கல்வித்துறை கட்டாயமாக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும்.
விளையாட்டு ஊக்குவிப்பு பெற்றோரிடம் வேண்டும்
கிருஷ்ணமூர்த்தி, செயலாளர், திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகம்:கடந்த, 2002ல் இருந்து இலவச கோடைக்கால பயிற்சி முகாம் நடத்தி, கூடைப்பந்து பயிற்சி வழங்கி வருகிறோம். துவக்கத்தில், விரல் விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளில் மட்டுமே, கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. தற்போது, அனைத்து பள்ளிகளிலும் கூடைப்பந்து பயிற்சி வழங்கப்படுகிறது; நிறைய பயிற்சியாளர்களும் உள்ளனர். சிறந்த வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்படுகின்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பிலும், கூடைப்பந்து மைதானம் உள்ளது; மாணவ, மாணவியர் பயிற்சி பெறுகின்றனர். 6 முதல், 9ம் வகுப்பு வரை, தங்கள் பிள்ளைகளை பயிற்சி, போட்டிக்கு அனுப்ப முன்வரும் பெற்றேர், 10ம் வகுப்புக்கு சென்ற பின், அவர்களை விளையாட ஊக்குவிப்பதில்லை.
பிளஸ் 2 வரை, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைப்பதால், மாநில, தேசிய அளவிலான வீரர்களை அடையாளம் காண்பதில், உருவாக்குவதில் தொய்வு தென்படுகிறது. கல்வியுடன் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
மாநில தடகளப்போட்டி சாதிக்கிறது நம் மாவட்டம்
சண்முகசுந்தரம், தலைவர், திருப்பூர் மாவட்ட தடகள சங்கம்:
திருப்பூரில் இருந்து சர்வதேச அளவில் நடந்த தடகளத்தில் தருண் அய்யாசாமி, கமல்ராஜ் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு முன் ஸ்ரீராம், லாவன்யா, ஷன்மதி, நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர். தற்போதும், தேசிய, மாநில அளவிலான பல போட்டிகளில் திருப்பூரில் இருந்து வீரர்கள் பங்கேற்று, பதக்கம் பெறுகின்றனர்.
இந்தாண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது, வரவேற்கத்தக்கது. தாலுகா அளவில், 'கிட்ஸ் மீட்' நடத்தி ஊக்குவித்து வருகிறோம். கிட்டதட்ட, 1,500 மாணவர்கள் தடகளத்தில் பங்கேற்கும் திறமையை பெற்றுள்ளனர். அதன் விளைவாக, பதக்கப்பட்டியலில் திருப்பூர் முன்னேறி வருகிறது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், 800 மீ., ஓட்டம் உள்ளிட்ட பல போட்டிகளில் பதக்கம் வெல்கின்றனர்.
கடந்த முறை, மாநில அளவிலான தடகளப்போட்டியில், திருப்பூர் மாவட்டம், முதன் முறையாக, 5ம் இடத்தை சாதித்துள்ளது. வரும் நாட்களில், மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவ, மாணவியரிடம் தடகள விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிகளவு மாணவர்களை பங்கேற்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி திடல் அவசியம்
இளங்கோவன், உடற்கல்வி ஆசிரியர்:
அரசுப்பள்ளி மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர். முதல்வர் கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதன் வாயிலாக, திறமையுள்ள அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கபடி, கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகள், சிலம்பம் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளிலும் பலர் தங்களின் திறமையை வெளிக்காட்டுகின்றனர்.
ஆனால், பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் விளையாட்டு கட்டமைப்பு இல்லாததால், ஏதோ ஒரு பள்ளியை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள, பொதுவானதொரு மைதானம் தேவை. ஒவ்வொரு விளையாட்டுக்கும், தனித்தனி திடல் அவசியம். அரசின் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அப்போது தான், அரசுப்பள்ளி மாணவர்களாலும் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்
சிலம்பாட்ட வீரர்கள் உருவாக பிரத்யேக மைதானம் தேவை
கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம்:
ஆரம்ப காலங்களில் சென்னையில் மட்டுமே சிலம்ப வீரர்கள் அதிகம் உருவான நிலையில், தற்போது திருப்பூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் சிலம்ப வீரர்கள், அதிகளவில் உருவாகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில், சமீப ஆண்டுகளாக ஏராளமானோர் சிலம்ப பயிற்சி பெறுகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் சிலம்ப பயிற்சி பெறுவதில் அதிக ஆர்வம் தென்படுகிறது. 50க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், ஆங்காங்கே பயிற்சி வழங்கி வருகின்றனர். கடந்தாண்டு முதலைமைச்சர் கோப்பை போட்டியில், திருப்பூரில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட, மாநில அளவிலான போட்டியில் வெற்றியும் பெறுகின்றனர். திருப்பூர் நகரப்பகுதியில் சிலம்பத்திற்கென, பிரத்யேக மைதானம் இருக்க வேண்டும். அப்போது, நிறைய சிலம்பாட்ட வீரர்களை உருவாக்க முடியும்; மாவட்டத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் வந்து செல்ல முடியும்.