/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர் பெற்ற குளங்கள்; குளிர்ந்த உள்ளங்கள் வறட்சி மாயமாகி தண்ணீர் 'அரசாட்சி' அறப்பணியால் உருவான நிஜப்புரட்சி
/
உயிர் பெற்ற குளங்கள்; குளிர்ந்த உள்ளங்கள் வறட்சி மாயமாகி தண்ணீர் 'அரசாட்சி' அறப்பணியால் உருவான நிஜப்புரட்சி
உயிர் பெற்ற குளங்கள்; குளிர்ந்த உள்ளங்கள் வறட்சி மாயமாகி தண்ணீர் 'அரசாட்சி' அறப்பணியால் உருவான நிஜப்புரட்சி
உயிர் பெற்ற குளங்கள்; குளிர்ந்த உள்ளங்கள் வறட்சி மாயமாகி தண்ணீர் 'அரசாட்சி' அறப்பணியால் உருவான நிஜப்புரட்சி
ADDED : ஆக 25, 2024 12:39 AM

பல்லடம்:விவசாயிகளின் நிலை உணர்ந்து, சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளங்களைத் துார்வாரி மேற்கொள்ளப்பட்ட அறப்பணியால், சுற்றியுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது; இது, விவசாயிகளுக்கு வாழ்வின் வரமாக மாறியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளது சாமளாபுரம் குளம். நுாற்று பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம், பாசன பரப்புக்கு பயன் தருவதுடன், ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் தஞ்சமடையும் இடமாகவும் உள்ளது.
சுற்றுவட்டார கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள இக்குளம், கடுமையாக மாசடைந்து கிடந்தது. 2021ல், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தீவிர முயற்சியால், சாமளாபுரம் குளம் மட்டுமன்றி, 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளபாளையம் குளமும் துார்வாரப்பட்டது. இப்பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றும் இப்பயனை அனுபவித்து வரும் விவசாயிகள் பலர், ரோட்டரி சங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
5 மணி நேரம் தண்ணீர்
கோவிந்தராஜ், பூமலுார்: பி.ஏ.பி., வாய்க்காலின் கடைமடையில் இருப்பதால், போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் தூர்வாரியது எங்களுக்கு மிகவும் பயன் அளித்து வருகிறது. இங்கு, 105 அடி ஆழ விவசாயக் கிணறு உள்ளது. முன்பெல்லாம், கிணற்றிலிருந்து ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் எடுக்க முடியும். சாமளாபுரம் குளம் துார்வாரிய பின், கிணற்றின் நீர் மட்டம் அதிகரித்து, 5 மணி நேரத்துக்கு மேல் தண்ணீர் எடுக்க முடிகிறது. இதே முறைப்படி, குளம் - குட்டைகளை துார்வாரினால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
---
வற்றுவதே இல்லை
திருமூர்த்தி, ஆட்டையாம்பாளையம்:
இரண்டரை ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதிக்கு பெரிய அளவு பாசன வசதி கிடையாது. தண்ணீருக்காக அடிக்கடி ஆழ்துளை கிணறு அமைப்பதால், ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் துார்வாரிய பின், கிணற்றில் தண்ணீர் வற்றுவதே இல்லை என்ற நிலை உள்ளது. குளங்களை வாரிய தன்னார்வலர்களுக்கு நன்றி.
---
விவசாயம் செழிக்கும்
தியாகராஜன், பள்ளபாளையம்:
நொய்யல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரால் சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் நிறைகின்றன. ஆனால் பல ஆண்டாக பெரிய மழை இல்லாததால், கோவை மற்றும் வழித்தட ஊர்களில் உள்ள கழிவு நீர்தான் நொய்யலில் வருகிறது. போதிய தண்ணீர் இல்லாததால் வேறு வழியின்றி அதையே விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தோம். ரோட்டரி சங்கம் சார்பில் குளங்கள் துார்வாரப்பட்ட பின், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நொய்யலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு செய்தால், இப்பகுதியில் விவசாயம் செழிக்கும்.
---
கழிவுநீர் கலப்பு
பொன்னுசாமி, சாமளாபுரம்: சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களின் கரைகள் சேதமடைந்தும், முட்கள், ஆகாயத்தாமரைகள் முளைத்தும் புதர் மண்டி கிடந்தன. ரோட்டரி சங்கத்தின் மாபெரும் முயற்சியால், முட்கள், புதர்கள் அகற்றப்பட்டு குளங்கள் முழுமையாக துார்வாரப்பட்டு, குளத்தின் கரைகளும் பலப்படுத்தப்பட்டன. பலரது முயற்சியில் துார்வாரப்பட்ட குளத்தில் கழிவு நீர் கலப்பது தான் வேதனையாக உள்ளது. கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நீர் வழித்தடங்களையும், நீர் ஆதாரங்களையும் மீட்க வேண்டும்.
---
---
கோடையிலும் வற்றாது
பாலசுப்பிரமணியம், நீர் மேலாண்மை குழு தலைவர், 63 வேலம்பாளையம்:
குளங்கள் துார்வாரியதால், வேலம்பாளையம், பூமலுார், ஆட்டையாம்பாளையம், இடுவாய் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், கோடைக்காலத்திலும் கூட இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதில்லை. பருவமழையால், சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களில் சேகரமாகும் தண்ணீரால், இங்குள்ள கிராமங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்மாதிரி செயல்பாடு
ஈஸ்வரன், மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள்
சங்க மாவட்ட தலைவர்:
சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் துார்வாரப்பட்டு, நீர் செறிவூட்டப்பட்டதால், இன்று, 30 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. மேலும், கோடை காலத்தில் கூட இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. குளங்கள் துார்வாரி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும், நிலத்தடி நீர்மட்டம் குறையவில்லை. ரோட்டரி சங்கத்தின் இந்த முயற்சியை ஊக்கப்படுத்துவதுடன், இது ஒரு முன்மாதிரியான செயல்பாடாக கருதி நன்றி கூறுகிறோம். இதேபோல், நீர் ஆதார குளம் குட்டைகளை தூர்வாரினால், விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதே இருக்காது.