ADDED : பிப் 26, 2025 11:53 PM

''செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்போர், அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் இருந்து உரிமம் பெற வேண்டும்; இதர செல்லப்பிராணிகளுக்கும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்; உரிமம் பெற பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், வீட்டு வரி ரசீது, வளர்ப்பு நாயின் போட்டோ, அதற்கு தடுப்பூசி செலுத்திய விபரம் உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி, அவிநாசி பேரூராட்சி உள்ளிட்டவை சார்பில், பொதுமக்களுக்கு 'நோட்டீஸ்' அச்சடித்து வினியோகித்து வருகின்றனர்.'கிராம ஊராட்சிகளில் தெரு நாய்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. தங்கள் வளர்ப்பு நாய்களை, தங்கள் பொறுப்பில் வீடுகள் அல்லது தோட்டங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
அவற்றால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி, மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கும் தாங்களே முழு பொறுப்பேற்க வேண்டும்; வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பாதிப்புக்குரிய இழப்பையும் ஈடு செய்ய வேண்டும்' என, அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
'எனக்கும் லைசென்ஸ் எடுங்க'
'எனக்கும் லைசென்ஸ் எடுங்க' என, நாய் கேட்பது போன்று, தமிழக அரசு முத்திரையுடன் 'ஸ்டிக்கர்' அச்சடித்து, பொது இடங்களில் ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன ஊராட்சி நிர்வாகங்கள்.

