/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூங்காவுக்கு பூட்டு: பெற்றோர் அதிர்ச்சி
/
பூங்காவுக்கு பூட்டு: பெற்றோர் அதிர்ச்சி
ADDED : மே 15, 2024 12:29 AM

அவிநாசி'அவிநாசியில், 1952ம் ஆண்டு பேரூராட்சியின் கீழ் ஈ.வே.ரா., வீதியில், வ.உ.சி., பார்க் அமைக்கப்பட்டது. பூங்காவில், சிறுவர்கள் விளையாடி மகிழ உபகரணங்களும் உள்ளன. வளாகத்தில், நகருக்கு முக்கிய குடிநீர் சேமிப்புக்கான, கீழ் மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன.
தற்போது கோடை கால விடுமுறை என்பதால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் விளையாட தகுந்த இடமாகவும், அருகிலேயே குடியிருப்பு உள்ளதால் பெற்றோர்கள் கண்காணிப்பில் பாதுகாப்பாகவும் விளையாட சிறந்த பொழுதுபோக்கு மைதானமாக உள்ளது.
ஆனால், கடந்த சில நாட்களாக மைதானத்தின் பிரதான வாயில் கதவு பூட்டப்பட்டுள்ளது. இதனால், சிறுவர்கள் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி உள்பக்கமாக குதித்து விளையாடிவிட்டு மீண்டும் சுவர் ஏறி வெளியில் செல்கிறார்கள். காம்பவுண்ட் சுவற்றில் கூர்மையான கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், ஆபத்தை உணராமல் அவ்வப்போது, காம்பவுண்ட் சுவர் மீது ஏறி சிறுவர்கள் குதிக்கும் போது அசம்பாவிதமாக எதுவும் நடைபெறுவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுத்து கோடை கால விடுமுறை முடியும் வரை மைதானத்தை பூட்டி வைக்காமல் திறந்து விட வேண்டும் என பெற்றோர் கூறுகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி கூறுகையில், ''காலை, 6:00 முதல், 11:00 மணி வரையிலும், மாலை, 4:00 முதல், இரவு, 7:00 மணி வரையிலும் வ.உ.சி., பூங்கா திறந்திருக்கும்.
இடைப்பட்ட நேரங்களில் மது அருந்தபவர்கள் உள்ளே வந்து பாட்டில்களை உடைத்துப் போட்டுவிட்டு செல்வதாலும் பேப்பர் கப் உள்ளிட்ட தின்பண்ட கழிவுகளை போட்டு செல்வதால் பூட்டி வைத்திருக்கிறோம். இருப்பினும், பெற்றோர் கோரிக்கையை ஏற்று, சிறுவர்கள் விளையாட திறந்து விடப்படும்,'' என்றார்.

