/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செட்டிக்குளத்தில் தாமரை மலர் சீசன் வருவாயும் கிடைக்கிறது
/
செட்டிக்குளத்தில் தாமரை மலர் சீசன் வருவாயும் கிடைக்கிறது
செட்டிக்குளத்தில் தாமரை மலர் சீசன் வருவாயும் கிடைக்கிறது
செட்டிக்குளத்தில் தாமரை மலர் சீசன் வருவாயும் கிடைக்கிறது
ADDED : பிப் 24, 2025 09:47 PM

உடுமலை,; செட்டிக்குளத்தின் ஒரு பகுதியில் நிரம்பியுள்ள தாமரை மலர்களால், அப்பகுதி மக்களுக்கு வருவாய் கிடைப்பதுடன், சித்த மருத்துவத்துக்கு தேவையான கிழங்குகளும் கிடைத்து வருகிறது.
உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்தில், செங்குளம், பெரியகுளம், தினைக்குளம் உட்பட குளங்கள் அமைந்துள்ளன.
இதில், பள்ளபாளையத்தில், அமைந்துள்ள செட்டிக்குளத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளால், தாமரை விதைகள் துாவிவிடப்பட்டன. தற்போது குளத்தில் பரவலாக தாமரைச்செடிகள் பரவி காணப்படுகிறது.
இந்த சீசனில், தாமரை மலர்கள் பூத்துக்குலுங்கி, அப்பகுதி மக்களுக்கு வருவாய் கொடுத்து வருகிறது. இம்மலர்களை சேகரித்து, கோவில்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
குளத்தில், நீர்மட்டம் குறையும் போது, தாமரை கிழங்குகளை சேகரித்து சித்த மருத்துவ மருந்துகள் தயாரிக்க விற்பனை செய்கின்றனர்.
சர்க்கரை நோய், சிறுநீரகக்கோளாறு, மூட்டுவலி போன்றவற்றுக்கு மருந்தாகவும், கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்கும் இந்த கிழங்குகள், சித்த மருத்துவத்தில், பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்குகளை, குளங்களில் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த கிழங்குகளை தோண்டி எடுத்துச்சென்று விற்பனை செய்வதால் கணிசமான வருமானம் கிடைக்கிறது.
உடுமலையிலுள்ள பெரும்பாலான குளங்களில் ஆகாயத்தாமரைகள், முள்செடிகள் உட்பட பல்வேறு களைச்செடிகளே நிறைந்து காணப்படும் நிலையில், செட்டிக்குளத்தில் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, அதே நேரத்தில் மக்களுக்கு பயன்படும் தாமரை செடிகள் காணப்படுகிறது.
தாமரை கிழங்குகள் மட்டுமில்லாமல், இலை மற்றும் தாமரை பூக்களும் பல்வேறு வர்த்தக பயன்படுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல இடங்களில் தாமரைகள் வர்த்தக நோக்கில் வளர்க்கப்பட்டு அதன் கிழங்கு, இலை மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோன்று பெரியகுளம், செங்குளம், ஒட்டுக்குளம், தினைக்குளம் போன்று அனைத்து குளங்களிலும் தாமரை விதைகளை துாவிவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.