/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாபியா'க்கள் பிடியில் நீர்நிலைகள் மண் கடத்தல் இரவு, பகலாக 'ஜரூர்'
/
'மாபியா'க்கள் பிடியில் நீர்நிலைகள் மண் கடத்தல் இரவு, பகலாக 'ஜரூர்'
'மாபியா'க்கள் பிடியில் நீர்நிலைகள் மண் கடத்தல் இரவு, பகலாக 'ஜரூர்'
'மாபியா'க்கள் பிடியில் நீர்நிலைகள் மண் கடத்தல் இரவு, பகலாக 'ஜரூர்'
ADDED : ஆக 02, 2024 10:03 PM

பல்லடம்:திருப்பூர் மாவட்டத்தில், குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு குறு, சிறு விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று, கடத்தல் கும்பல், கனிம வளத்தை இரவு, பகலாக கொள்ளையடித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 260க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் மற்றும் களிமண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
'மாவட்டம் முழுதும் எந்த குளம், குட்டைகளிலும் வண்டல் மண், களிமண் என்பதே பெரிய அளவு கிடையாது; வண்டல் மண் என்ற பெயரில், இரவு, பகலாக கிராவல் மண் கடத்தப்படுகிறது. லோடு ஒன்று, 2,500 முதல் 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குட்டையில் வண்டல் மண் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்த பின்பே அனுமதி வழங்க வேண்டும். ஆய்வு செய்யாமல், சிறு, குறு விவசாயிகள் என்ற பெயரில், கனிம வளங்களை கடத்திச் செல்லும் கும்பலுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர்' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பல்லடம் தாசில்தார் ஜீவாவிடம் கேட்டபோது, 'அனுமதி வழங்குவது மட்டுமே, வருவாய்த்துறையினரின் பணி. அதில், வண்டல் மண், களிமண் உள்ளதா; எவ்வளவு யூனிட் எடுக்க வேண்டும் என்பதை ஊரக வளர்ச்சித் துறை தான் முடிவு செய்யும். வண்டல் மண் எடுப்பதை கண்காணிக்க, ஊரக வளர்ச்சித்துறை மூலம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரிடம் கேட்டதற்கு, ''வண்டல் மண் இல்லாவிட்டாலும், குட்டையை ஆழப்படுத்தினால் மழைநீர் தேங்கும் என்பதால் பொறியாளர் மூலம் மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவு மண் எடுப்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமுறை மீறி எடுக்கப்பட்டால் அதை வருவாய் துறை தான் கண்காணிக்க வேண்டும். வருவாய்த்துறை, கனிமவளத்துறை, சுரங்கத் துறை உள்ளிட்டவை இதற்காகவே உள்ளன,'' என்றார்.
யார் பொறுப்பு?
இத்திட்டத்தில் முறையான ஒருங்கிணைப்பு கிடையாது. அரசாணைப்படி எதுவுமே பின்பற்றப்படுவதில்லை. வண்டல் மண்ணே இல்லாத நீர்நிலைகளுக்கு அனுமதி வழங்குவது, அதில், கிராவல் மண் எடுக்க அனுமதிப்பது, முறையாகக் கண்காணிக்காதது என, பல்வேறு விதிமீறல்கள் நடந்து வருகின்றன. விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம், முழுக்க முழுக்க மண் கடத்தல் 'மாபியா'க்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.