/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொப்பை போடாமல் பார்த்துக்கோங்க!
/
தொப்பை போடாமல் பார்த்துக்கோங்க!
ADDED : ஜூலை 01, 2024 01:50 AM
இயற்கையாக ரத்த அழுத்தம் குறைக்க, சில வழிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உடல்பருமன் அதிகரிக்க அதிகரிக்க சர்க்கரையின் அளவும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். தினசரி காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதுபோல இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால் நமது உடலின் எடை எப்போதும் கட்டுக்குள் இருக்கும். ரத்த அழுத்தமும் சீராக இருக்க உதவும்.
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தாலே உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தினசரி யோகா, மற்றும் மூச்சுப்பயிற்சிகளைச் செய்வதால், உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தஅழுத்தம் சீராக இருக்கும்.
சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சமோசா, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த தின்பண்டங்கள் சாப்பிடுவதை, முடிந்த அளவுக்குக் குறைத்துக்கொள்வது நல்லது.
இதயக்குழாய்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவேண்டியது அவசியம். சிகரெட்டில் உள்ள நிகோட்டின், மதுவில் உள்ள ஆல்கஹால், டீ, காபி ஆகியவற்றில் உள்ள கபைன் ஆகியவற்றால், இதயக்குழாயில் பாய்ந்து செல்லும் ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், படபடப்பு, திடீர் தலைசுற்றல், வியர்வை வழிதல் ஆகியவை ஏற்படும்.
உணவைப் பதப்படுத்தும்போது, சோடியம் உப்பு அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது.
அவ்வப்போது, எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றைச் சோதித்துப் பார்த்து குறைத்துக்கொள்வது நல்லது. தொப்பை போடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
எண்ணெயில் பொரித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். இவற்றைச் சாப்பிடுவதால், ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. புரதச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அசைவ உணவுகளில் எண்ணெய், உப்பு, காரம் ஆகியவற்றை அளவாக சேர்த்து சாப்பிடலாம். அசைவம் சாப்பிடாதவர்கள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், பருப்பு - பயறு வகைகளைச் சாப்பிடலாம்.