/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்ணரை குளம் வாய்க்கால் பிரச்னை வடிகாலுக்கு குழாய் பதித்து தீர்வு
/
மண்ணரை குளம் வாய்க்கால் பிரச்னை வடிகாலுக்கு குழாய் பதித்து தீர்வு
மண்ணரை குளம் வாய்க்கால் பிரச்னை வடிகாலுக்கு குழாய் பதித்து தீர்வு
மண்ணரை குளம் வாய்க்கால் பிரச்னை வடிகாலுக்கு குழாய் பதித்து தீர்வு
ADDED : ஜூலை 21, 2024 12:28 AM

திருப்பூர்:மண்ணரை குளத்துக்கு செல்லும் வாய்க்காலில், கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்கு நீண்ட காலத்துக்குப் பின் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் அணைக்காடு பகுதியில் உள்ள அணைக்கட்டிலிருந்து வாய்க்கால் மூலம் மண்ணரை குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. நீண்ட காலம் முன்னர் அமைக்கப்பட்ட இந்த வாய்க்கால் சிதிலமடைந்து காணப்பட்டது.
இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் இந்த வாய்க்கால் புதுப்பித்து கட்டும் பணி நடந்தது.
இந்த வாய்க்கால் செல்லும் வழியில், மணியகாரம்பாளையம் ரோடு மற்றும் சேர்மன் கந்தசாமி ரோடு ஆகியன சந்திக்கும் இடத்தில் கழிவு நீர் வடிகால் அமைந்துள்ளது. குளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலும், கழிவு நீர் வடிகாலும் சந்திக்கும் இடத்தில் வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு, பல ஆண்டாக கழிவு நீர் வாய்க்காலில் செல்வது வாடிக்கையாக மாறியது.
மண்ணரை குளத்தை சீரமைத்து பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்ட வேர்கள் அமைப்பினர் இந்த கழிவு நீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். இதனால், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர்.
அவ்வகையில், இந்த இடத்தில் கடந்த பிப்., மாதம் வாய்க்காலைக் கடந்து கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை ரோடு போடும் பணியின் போது வடிகால் சேதமடைந்தது. தற்போது அந்த இடத்தில் ராட்சத குழாய் அமைக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
வேர்கள் அமைப்பு சார்பில் இந்த குழாய் நிலை நிறுத்தும் பணி நடந்தது. அடுத்த கட்டமாக குழாயை முறையாக பதித்து கான்கிரீட் மூலம் கட்டுமானப்பணி செய்யும் போது, கழிவு நீர் முறையாக வடிகாலில் சென்று சேரும். இதற்கான முயற்சியை மேற்கொண்ட வேர்கள் அமைப்பினரை பல தரப்பினரும் பாராட்டினர்.