/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாயாறு - பாண்டியாறு இணைப்பு திட்டம் ரூ.100 கோடி செலவிலேயே சாத்தியமாகும்'
/
'மாயாறு - பாண்டியாறு இணைப்பு திட்டம் ரூ.100 கோடி செலவிலேயே சாத்தியமாகும்'
'மாயாறு - பாண்டியாறு இணைப்பு திட்டம் ரூ.100 கோடி செலவிலேயே சாத்தியமாகும்'
'மாயாறு - பாண்டியாறு இணைப்பு திட்டம் ரூ.100 கோடி செலவிலேயே சாத்தியமாகும்'
ADDED : ஆக 25, 2024 01:23 AM

திருப்பூர்;ஓய்வு பெற்ற நீர்வளத்துறை தலைமை பொறியாளரும், தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளருமான வீரப்பன், நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் வாயிலாக, 22 ஆண்டுகளாக, தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து, அரசுக்கு இலவசமாக ஆலோசனை வழங்குவதுடன், விரிவான திட்ட அறிக்கையும் சமர்ப்பித்து வருகிறோம்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில், ஆரம்பத்தில் குழாய் வழியாக நீரை பம்ப் செய்து, செறிவூட்டுவது சாத்தியமாகுமா என்ற சந்தேகம் இருந்தது.
அப்போது, அண்டை மாநிலமான ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது, கோதாவரியில் இருந்து விஜயவாடா கிருஷ்ணா அணைக்கு பட்டிசீமா திட்டம் என்ற பெயரில், 80 டி.எம்.சி., நீரை, குழாய் வழியாக, இரண்டாண்டில் நீரேற்று முறையில் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தினார். அதே போன்று, தெலுங்கானாவில் முதல்வராக இருந்த சந்திரசேகரராவ், கோதாவரியில் இருந்து, 140 டி.எம்.சி., நீரை, 10, 15 நீரேற்று நிலையங்கள் வாயிலாக, 40,000 ஏரி, குளம், குட்டைகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தினார். இது, காலேஸ்வரம் திட்டம் எனப்படுகிறது.
நீரை ஓரிடத்தில் பம்ப் செய்தால், ஒரே நாளில், 150 கி.மீ., துாரம் தண்ணீர் கொண்டு சென்று சேர்க்க முடியும் என்பதை, அம்மாநிலங்களுக்கு நேரில் சென்று அறிந்து வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், அதை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
திறந்த கால்வாயில் நீர் எடுத்துச் சென்றால், நீர் திருட்டு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும் என்பதை அரசு உணர்ந்தது. அதன் அடிப்படையில், முதல்வராக இருந்த பழனிசாமி, நீரை 'பம்ப்' செய்து எடுத்து வரும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், ஆண்டுக்கு, 70 நாட்கள், 1.50 டி.எம்.சி., உபரிநீரை பெற்று, 1,045 குளம், குட்டைகளில் நிரப்புவது தான் திட்டம்.
இத்திட்டத்தில் விடுபட்ட, 1,400 குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு கூடுதலாக, 1.50 டி.எம்.சி., தண்ணீர் தேவை என்ற நிலையில், அதற்கு இத்திட்டத்தில் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, பொறியாளர் ஜெயபிரகாசம் உள்ளிட்டோர், நீலகிரி மாவட்டம், ஓவேலி என்ற இடத்தில், இரண்டு நாள் முகாமிட்டு, அங்கு பாயும் பாண்டியாறு பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அந்த ஆறு தமிழக எல்லைக்குள், 32 கி.மீ., ஓடி, பின் மேற்கே திரும்பி, கேரளாவிற்குள் புகுந்து புன்னம்புழா ஆறாக ஓடுகிறது.
ஓவேலி பகுதியில், ஆண்டுக்கு சராசரியாக, 250 -- 300 செ.மீ., மழை பெய்யும் நிலையில், இடைப்பட்ட, 32 கி.மீ., துாரத்தில், ஆறு தடுப்பணைகள் கட்டி, பாண்டியாறு நீரை, தமிழக எல்லைக்குள்ளேயே திருப்பி, தெப்பக்காடு வழியாக மாயாற்றில் கலக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதுவும், திறந்தவெளி கால்வாயாக அல்லாமல், குழாய் வழியாகவே கொண்டு செல்ல வேண்டும். மாயாறு நீரை பவானிசாகருக்கு கொண்டு வருவதன் வாயிலாக குறைந்தபட்சம், 5 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைக்கும்.
இத்திட்டத்தை நிறைவேற்ற, 100 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்ற விரிவான திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம்.
இதில், 11.89 ஏக்கர் நிலங்களை மட்டும் கையகப்படுத்தினால் போதும். மலைவாழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி மட்டும் பெற வேண்டும்.
பாண்டியாறு, கேரளாவில் புன்னம்புழா ஆறாக ஓடி, வனப்பகுதி வழியாகவே சென்று வீணாக அரபிக் கடலில் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்திற்குள்ளேயே திருப்பி, மாயாற்றுடன் இணைக்க எந்த எதிர்ப்பும் இருக்காது.
இதன் வாயிலாக, அத்திக்கடவு திட்டத்தில், விடுபட்ட குளம், குட்டைகளையும் இணைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

