/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயில்ரங்கம் கோவில் திருப்பணி துவங்குகிறது
/
மயில்ரங்கம் கோவில் திருப்பணி துவங்குகிறது
ADDED : பிப் 24, 2025 01:11 AM

திருப்பூர்; பழமைமிக்க, மயில்ரங்கம், வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிேஷகத் திருப்பணிகள் துவங்கவுள்ளதையொட்டி, துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் பகுதியில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வைத்தீஸ்வரன் கோவிலில், 45 ஆண்டுக்குப் பின் தற்போது கும்பாபிேஷகம் நடக்கிறது. திருப்பணிகள் துவங்கவுள்ளன.
வெள்ளகோவில் அடுத்த மயில்ரங்கம் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. கோவில் குறித்த கல்வெட்டுகளில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில், கி.பி., 1532ல் கோவிலுக்கு நிலம் தானம் வழங்கப்பட்டது குறித்த கல்வெட்டுகள் உள்ளன. கோவில் அதற்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது.
கோவில், 84 பிரமாண்ட துாண்கள் தாங்கி நிற்கும் மண்டபம்; விதவிதமான இசை ஒலி எழுப்பும் துாண்கள்; தமிழர்களின் சிற்பக்கலையை பிரதிபலிக்கும் பல்வேறு சிற்பங்கள் உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்டிருக்கிறது.
அக்காலத்தில் ஆறு கால பூஜை நடந்த இக்கோவில் தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. இக்கோவில் கும்பாபிேஷகம் கடந்த 1985ல் நடத்தப்பட்டது.தொடர்ந்து ஐந்தாண்டுகளாக அனுமதி கேட்டு ஊர்க்கமிட்டியினர் வலியுறுத்திய நிலையில் தற்போது கும்பாபிேஷகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிேஷகத்துக்கு கோவிலை தயார்படுத்தும் வகையில், கோவில் வளாகம் சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது. கோவில் வளாகத்தில் தேங்கிக் கிடந்த மண் குவியல்கள் அகற்றியும், அனைத்து கட்டுமானங்களும் துாய்மைப்படுத்தியும் பணி நடக்கிறது.
திருப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவோர் 97871 92000; 98427 04686 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

