/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரங்கு அம்மை: சுகாதாரத்துறை உஷார்
/
குரங்கு அம்மை: சுகாதாரத்துறை உஷார்
ADDED : ஆக 18, 2024 12:33 AM
திருப்பூர்;'எம்பாக்ஸ்' என அழைக்கப்படும் குரங்கு அம்மை ('மங்கி பாக்ஸ்') தொற்று ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.
பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதால், மத்திய அரசு, மாநிலங்களை உஷார்படுத்தியுள்ளது. தமிழகத்தில், பொது சுகாதாரத்துறை இயக்குனர் தரப்பில் இருந்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் முரளி கூறியதாவது:
விமானம், கப்பல் வழியாக வெளிநாடுகளில் இருந்து வருவோர் உடல்நலம் குறித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, முதல்கட்ட பரிசோதனை நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் தனிக்குழு அமைத்து கண்காணிப்பு துவங்கப்படும். அறிகுறி இருப்பவர் கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, உடலில் தடிப்புகள், மூட்டுக்களில் தொடர் தசைவலி, வழக்கத்தை விட உடல் குளிர்ச்சி, முதுகுவலி மற்றும் இயல்பை விட உடல் தொடர் சோர்வு ஆகியவை 'மங்கிபாக்ஸ்' எனப்படும் குரங்கு அம்மையின் அறிகுறிகள்.
தொற்று பாதிப்புள்ள விலங்குகளை வேட்டையாடுதல், சமைத்தல் அதன் எச்சம் உடலில்படுவதன் வாயிலாக, மிருகங்களிடம் இருந்து குரங்கு அம்மை பரவுகிறது.
மனிதர்கள் நெருக்கமாக பழகும் போதும், தோலுடன் தோல் உரசும் போதும், வாய்வழி அல்லது உடலுறவின் வாயிலாகவும் தொற்று எளிதில் பரவுகிறது. துணிகள் வாயிலாகவும், 'டாட்டூ' குத்தும் போது அந்த ஊசி வாயிலாகவும் பரவுகிறது.

