/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மர்ம நோய்க்கு குரங்குகள் பலி: வனக்குழுவினர் ஆய்வு
/
மர்ம நோய்க்கு குரங்குகள் பலி: வனக்குழுவினர் ஆய்வு
ADDED : பிப் 28, 2025 11:25 PM

உடுமலை; ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக பகுதியிலுள்ள திருமூர்த்திமலையில், குரங்குகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் இருந்த குரங்குகள், திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்தன.
மேலும், பல குரங்குகள் சோர்வான நிலையில், உணவு எடுக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டன. குரங்குகள் இறப்பு குறித்து உண்மை நிலை கண்டறியும் வகையில், கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் உத்தரவு அடிப்படையில், கோவை வனப்பாதுகாப்பு படை உதவி இயக்குனர் கணேஷ்ராம், வனத்துறை கால்நடை டாக்டர்கள் சுகுமார், விஜயராகவன் மற்றும் குழுவினர் குரங்குகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
வனத்துறையினர் கூறியதாவது: நோய்த்தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குரங்குகளின் ரத்த மாதிரி சேகரித்து, சென்னையிலுள்ள வனத்துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உன்னி தாக்குதலா, வைரஸ் காய்ச்சலா அல்லது வேறு ஏதாவது காரணமா, என நாளை (இன்று) வழங்கப்படும் ஆய்வு முடிவில் தெரியவரும். தற்போது, பாதிக்கப்பட்ட குரங்குகளுக்கு, வலி நிவாரணி, வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பழ ஜூஸில் கலந்து வழங்கப்பட்டது. மற்ற குரங்குகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி திரவம், ஊட்டச்சத்து டானிக் கொடுக்கப்பட்டது. பழத்தில் மருந்து வைத்து கொடுத்த நிலையில், அவை துாக்கி வீசியதால், பழங்களின் ஜூஸ் வாயிலாக கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.