/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையை தாக்கும் அந்துப்பூச்சி! கள ஆய்வில் உறுதிப்படுத்திய அதிகாரிகள்
/
தென்னையை தாக்கும் அந்துப்பூச்சி! கள ஆய்வில் உறுதிப்படுத்திய அதிகாரிகள்
தென்னையை தாக்கும் அந்துப்பூச்சி! கள ஆய்வில் உறுதிப்படுத்திய அதிகாரிகள்
தென்னையை தாக்கும் அந்துப்பூச்சி! கள ஆய்வில் உறுதிப்படுத்திய அதிகாரிகள்
ADDED : மே 05, 2024 12:09 AM

அவிநாசி;அவிநாசி பகுதியில் தென்னையில் அந்துப்பூச்சி தாக்குதல் தென்படுவதாக, தோட்டக்கலை துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அவிநாசி, தண்டுக்காரன்பாளையம் பகுதியில், தென்னை மரத்தில் புதிய வகை நோய் தாக்குதல் இருப்பதாக, விவசாயிகள் பலரும், அவிநாசி தோட்டக்கலை துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். 'மரங்களின் ஓலைகள், தீ வைத்து எரித்தது போன்று, பழுப்பு நிறத்துக்கு மாறி, மரமே காய்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் உள்ளது' என, விவசாயிகள் கூறினர்.
அதன் விளைவாக, அவிநாசி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட அலுவலர்கள், சம்மந்தப்பட்ட தோட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர் கூறியதாவது;அவிநாசி வட்டாரத்தில் சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால், தென்னை மரங்களில் நோய் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. தென்னையில், எண்ணெய் பனை அந்துப்பூச்சி தாக்குதல் இருப்பது தெரிய வந்தது. இந்த பூச்சியின் இளம் புழுக்கள், தென்னை இலையின் கீழிருந்து, அடிபாகத்தின் வெளிப்பகுதியை உண்ணும். புழுக்கள் முதிர்ச்சி அடையும் போது, முழு இலைகளை உண்டுவிடும்; இலையின் நடுப்பகுதி மட்டுமே இருக்கும்.
பூச்சி கண்டறிதல்இவ்வகை பூச்சிகளின் முட்டை, இலைகளின் மேற்பரப்பில் தட்டையாக பளபளப்பாக இருக்கும். முட்டையில் இருந்து வெளியே வரும் இளம் புழுக்கள், பழுப்பு நிறத்துடன் வெள்ளைக் கோடுகள் மற்றும் வயிற்றின் மேற்பகுதியில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். தாய் அந்துப்பூச்சிகளுக்கு, பச்சை நிற இறக்கைகள் இருக்கும். இப்புழுவை தொடும் போது, மனிதர்களுக்கு அரிப்பு ஏற்படும்.
கட்டுப்படுத்தும் முறைஇப்பூச்சி தாக்கப்பட்ட தென்னை மரங்களின் அருகில் உள்ள வாழை மரங்களிலும், அதன் தாக்குதல் தென்பட்டுள்ளது. நோய் தாக்குதல் தென்பட்ட, 20 நாட்கள் கடந்த தோட்டங்களில், ஏக்கருக்கு, 3 முதல், 4 விளக்குப்பொறி வைக்க வேண்டும். அவற்றை தோப்புகளில், இரவு, 7:00 மணி முதல், 11:00 மணி வரை எரிய விட்டு அணைத்து விட வேண்டும்.
விளக்குப் பொறியின் கீழே ஒரு பாத்திரத்தில், நீர் வைக்க வேண்டும். இதில் குவியும் தாய் அந்துப்பூச்சிகள், இறந்து விடும். பாதிக்கப்பட்ட தென்னை ஓலைகளை மட்டையில், மூன்றடி வரை மரத்தில் விட்டு, வெட்டி அழிக்க வேண்டும். 'கோரஜன்' என்ற பூச்சி மருந்தை, 0.5 மி.லிட்., மற்றும் ஒட்டு திரவம், ஒரு மி.லிட்., ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து, இலைகளின் அடிபாகம் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு அவிநாசி தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.