/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூணாறு ரோட்டை முழுமையாக சீரமைக்கணும்! மண் அரிப்பால் அதிகரிக்கும் சிக்கல்
/
மூணாறு ரோட்டை முழுமையாக சீரமைக்கணும்! மண் அரிப்பால் அதிகரிக்கும் சிக்கல்
மூணாறு ரோட்டை முழுமையாக சீரமைக்கணும்! மண் அரிப்பால் அதிகரிக்கும் சிக்கல்
மூணாறு ரோட்டை முழுமையாக சீரமைக்கணும்! மண் அரிப்பால் அதிகரிக்கும் சிக்கல்
ADDED : ஜூலை 25, 2024 10:25 PM
உடுமலை : மூணாறு ரோட்டில், தமிழக எல்லை வரை, ரோட்டோரத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு, வாகன போக்குவரத்து பாதுகாப்பில்லாத நிலைக்கு மாறியுள்ளது; நீண்ட காலமாக நிலவும் பிரச்னைக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
உடுமலையில் இருந்து சின்னாறு, மறையூர் வழியாக மூணாறு செல்லும் ரோடு, இரு மாநில வாகன போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மறையூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக உடுமலை வந்து செல்கின்றனர்.
அதே போல், இப்பகுதியில் இருந்து காய்கறி மற்றும் இதர பொருட்கள் மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டு முழுவதும், சுற்றுலா வாகனங்களும் இந்த ரோட்டில், அதிகளவு சென்று வருகின்றன.
உடுமலையில் இருந்து சின்னாறு வரையிலான, 28 கி.மீ., ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால், மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், பராமரிக்கப்படுகிறது.
ஒன்பதாறு செக்போஸ்டில் துவங்கி, சின்னாறு வரை, இந்த ரோடு, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தின் மையப்பகுதியில், அமைந்துள்ளது.
இதனால், மழைக்காலத்தில், வனப்பகுதியிலுள்ள, சிற்றாறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மூணாறு ரோட்டை பல இடங்களில் கடக்கிறது. மேலும், மேடான பகுதிகளில், வடிகால் இல்லாததால், ரோட்டோரத்தில் அதிகளவு மண் அரிப்பு ஏற்படுகிறது. சமீபத்திய தொடர் மழைக்கு பிறகு, 10 கி.மீ., க்கும் அதிகமான பகுதியில், ரோட்டோரத்தில், அதிக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடைவெளி விடும் போது, ரோட்டையொட்டியுள்ள பள்ளத்தில், வாகனங்கள் இறங்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அப்பகுதிகளில், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிலை பரிதாபமாகி விடுகிறது.
இரு மாநில போக்குவரத்தில், முக்கிய பங்கு வகிக்கும் ரோடு, பல்வேறு இடங்களில், விபத்து பகுதியாக மாறியுள்ளது. காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்வதும் சிரமமானதாக மாறியுள்ளது.
சின்னாறு ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என, நீண்ட காலமாக இரு மாநில வாகன ஓட்டுநர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உடுமலை - மூணாறு ரோட்டில், கேரள மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோர அரிப்பை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
சிற்றாறுகள் கடக்கும் இடத்திலும், மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மேடான பகுதிகளிலும், ரோட்டையொட்டி, குறிப்பிட்ட உயரத்துக்கு, கான்கிரீட் தளம் அமைத்துள்ளனர். இதனால், அரிப்பு தடுக்கப்படுவதுடன், வாகனங்களும் தடுமாறாமல், விலகி செல்ல முடியும்.
இந்த முறையை தமிழக நெடுஞ்சாலைத்துறையினரும் பின்பற்றலாம். இது குறித்து ஏற்கனவே, தயாரிக்கப்பட்ட கருத்துரு அடிப்படையில், நிதி ஒதுக்கி பணிகளை துவக்கவும், அரசு உத்தரவிட வேண்டும்.

