/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இசைந்த'வங்கி அதிகாரிகள்; முடிவுக்கு வந்த போராட்டம்
/
'இசைந்த'வங்கி அதிகாரிகள்; முடிவுக்கு வந்த போராட்டம்
'இசைந்த'வங்கி அதிகாரிகள்; முடிவுக்கு வந்த போராட்டம்
'இசைந்த'வங்கி அதிகாரிகள்; முடிவுக்கு வந்த போராட்டம்
ADDED : ஜூலை 24, 2024 11:54 PM

திருப்பூர் : வங்கி நிர்வாகத்துக்கு எதிராக, விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில், அசல் ஆவணங்களை வழங்குவதாக, வங்கி அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, ஆலம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள், கனரா வங்கியில் சொத்தை அடமானம் வைத்து விவசாய மேம்பாட்டு கடன் பெற்றனர். கடன் தொகையை திருப்பி செலுத்திய பின்னரும், வங்கியின் தரப்பில் அடமானத்தை ரத்து செய்யாமல், அசல் ஆவணத்தை திருப்பி தராமல் காலதாமதம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அசல் ஆவணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனரா வங்கி முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்து, நேற்று காலை வங்கி முன் திரண்டனர்.
மாநகர போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், வங்கியில் அமைதி பேச்சு நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்க்கபிரசாத், முதுநிலை மண்டல மேலாளர்கள் பாலாஜி, தேவேந்திரன் உட்பட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். விவசாயிகள் தரப்பில் தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர் ஈசன் முருகசாமி, மாநகர செயலாளர் ரமேஷ் பங்கேற்றனர்.
பேச்சு வார்த்தை நிறைவில், 'ஒரு வாரத்துக்குள் விவசாயிகளுக்கு சொத்து பத்திரம், அசல் ஆவணங்கள் திரும்ப வழங்கப்படும்,' என உறுதியளிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.

