/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய அறிவியல் தின விழா: மாணவர்களுக்கு போட்டி
/
தேசிய அறிவியல் தின விழா: மாணவர்களுக்கு போட்டி
ADDED : பிப் 25, 2025 10:31 PM

உடுமலை, ;தேசிய அறிவியல் தினத்தையொட்டி, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா நடந்தது.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ேராட்டரி சங்கம், எம்.ஜி சஞ்சீவ்ராஜ் நினைவு அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் அறிவியல் திருவிழா நடந்தது.
அறிவியல் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தது. துவக்க விழாவில் பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி, தேஜஸ் ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
கமலம் கல்லுாரி முதல்வர் நித்யாதேவி தலைமை வகித்தார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலிருந்து விஞ்ஞானி ராஜசேகர், பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி சீனிவாசன், கடலில் செய்து வரும் ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், அறிவியல் வினாடி- வினா, அறிவியல் திறனறிப்போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில், சுற்றுப்பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சி நடந்தது. ரோபோடிக்ஸ் பயிற்சி பட்டறை மற்றும் ராக்கெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் கோளரங்க காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர். பரிசளிப்பு விழாவில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, அறிவியல் திருவிழா குறித்து பேசினார். உடுமலையில் பல்வேறு சாதனைகள் செய்தவர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர் பலர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தொலைநோக்கி உட்பட அறிவியல் சார்ந்த பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.