/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நினைத்த காரியம் கைகூட நவக்கிரஹ ரத்ன விநாயகர்
/
நினைத்த காரியம் கைகூட நவக்கிரஹ ரத்ன விநாயகர்
ADDED : செப் 07, 2024 01:28 AM

திருப்பூரில், அறுபடை விநாயகர்களை, மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகரில், ஒரே இடத்தில் தரிசிக்கலாம்! கோவில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. விநாயகரின் சிரசில் குரு, நெற்றியில் சூரியன், வலது கரங்களில் சனி மற்றும் புதன், இடது கரங்களில் ராகு மற்றும் சுக்கிரன், வலது காலில் செவ்வாய், இடது காலில் கேது, வயிற்றில் சந்திரன் என, நவகிரகங்களும், ரத்தின விநாயகருக்குள் அடக்கம்.
ரத்தினவிநாயகர் கோவில் கருவறை, யானையின் பின் அமைப்புடன், 'கஜ பிருஷ்டம்'என்ற அடிப்படையில், விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது. நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் மதுரை முக்குருணி விநாயகர், 5.50 அடி உயரத்தில், மூலவராக ஆற்றல் பொருந்தியவராக வீற்றிருக்கிறார்.
கோவில் கருவறையை சுற்றிலும், கல்வியும் ஞானமும் அருளும் ஆழத்து விநாயகர், மரண பயம் போக்கும் திருக்கடையூர் கள்ளவாரண விநாயகர், அல்லல் தீர்க்கும் திருவண்ணாமலை செந்துார விநாயகர், ஞானம் அருளும் திருநாரையூர் பொல்லாபிள்ளையார், முக்திக்கு வழிகாட்டும் காசி துண்டி விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். பல இடங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள், எஸ்.ஆர்., நகரில், ஒரே கோவிலில் அமர்ந்து பக்தர்களுக்கு நற்கதி வழங்கி வருகின்றனர். வடகிழக்கு பாகத்தில், நீருற்று விநாயகர் மற்றும் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.