/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை நீர் சேகரிப்பதில் அலட்சியம்; பரிதாப நிலையில் ஓடைகள்
/
மழை நீர் சேகரிப்பதில் அலட்சியம்; பரிதாப நிலையில் ஓடைகள்
மழை நீர் சேகரிப்பதில் அலட்சியம்; பரிதாப நிலையில் ஓடைகள்
மழை நீர் சேகரிப்பதில் அலட்சியம்; பரிதாப நிலையில் ஓடைகள்
ADDED : செப் 04, 2024 01:27 AM
உடுமலை:குடிமங்கலம் பகுதியிலுள்ள, மழை நீர் ஓடைகள் ஆக்கிரமிப்புகளால், மாயமாகி வருவது குறித்து, அரசுத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடுமலை அருகே குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், மழைநீர் ஓடைகள் அமைந்துள்ளன. குடிமங்கலத்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு, 685 மி.மீ., ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, சராசரியை விட மழை குறைந்து, வறட்சி நிலவுகிறது.
கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை பெய்தாலும், அதில், கிடைக்கும் மழை நீரை சேகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, மழை நீர் ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகலாக மாறியுள்ளது.
இங்குள்ள பெரும்பாலான கிராமங்களில், மழைக்காலத்தில், விளைநிலம் மற்றும் குடியிருப்பிலிருந்து வெளியேறும் தண்ணீர், குளங்களில், தேங்கும் வகையில், வடிகால் மற்றும் ஓடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
குளங்களில் தேங்கும் தண்ணீரால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படாமல் இருந்தது. இத்தகைய வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குளங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. எனவே, அனைத்து பருவமழை சீசனிலும் குளங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால், விவசாயிகள், குடிமங்கலம் பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இப்பகுதிக்கு, வடகிழக்கு பருவமழை சீசனிலேயே அதிக மழைப்பொழிவு கிடைக்கும்.
இந்த மழை சீசன் விரைவில் துவங்க உள்ள நிலையில், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் இணைந்து ஆக்கிரமிப்பிலிருந்து, ஓடை, மழை நீர் வடிகால்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக அரசும், பொதுப்பணித்துறையினரும் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதன் வாயிலாக, ஓடைகள் புதுப்பொலிவு பெற்று, மழை நீரும் சேமிக்கப்படும். அப்பகுதி மக்குளம் பெரிதும் பயனடையும் வாய்ப்பு ஏற்படும்.