/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர் மேலாண்மை மேம்படுத்த புதிய செயலி அறிமுகம்
/
நீர் மேலாண்மை மேம்படுத்த புதிய செயலி அறிமுகம்
ADDED : மார் 07, 2025 03:38 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நீர் பயன்பாடு மற்றும் சேமிப்பை மேம்படுத்தும் வகையில், அது குறித்த விவரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக, மொபைல் போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், 'நம்ம திருப்பூர்' என்ற மொபைல் போன் செயலியில், 'மாநகராட்சி - நீர் பாதுகாப்பு தொகுதி' என்ற பகுதி ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. அதில், வேர்ல்ட் வார்ட்டர் பண்ட் - இந்தியா ஆகியன இணைந்து, நீர் மேலாண்மைக்கான புதிய பகுதியை அறிமுகப்படுத்தி உள்ளன.
இதனை மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். 'நம்ம திருப்பூர்' செயலியில் இணைக்கப்பட்டுள்ள இந்த 'நீர் பாதுகாப்பு தொகுதி' நகரப்பகுதியில் உள்ள நீர் வளங்களை திறமையாக நிர்வாகம் செய்வதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைல் போன் செயலி வாயிலாக, நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்கவும், குடியிருப்பு நீர் பயன்பாட்டை மேம்படுத்தவும், மழைநீர் சேகரிப்பை முன்னெடுக்கவும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் பயன்பாட்டை பொறுப்புணர்வுடன் மேம்படுத்துதல், நிலத்தடி நீர் மாறுதல்களை வரைபடமிடுதல், நீர் வினியோகத்தை சிறப்பாக மேம்படுத்தவும், நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும். திருப்பூரின் நீர் எதிர்காலத்தைக் காப்பாற்ற பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும். இந்த செயலி வாயிலாக நகரப் பகுதி மக்கள் தங்களது நீர் பயன்பாடு, தேவை, நீர் ஆதாரம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்து அவற்றை ஆவணப்படுத்தும் வகையில் அமைவதாக, மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.