/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தில் புதுப்பெண் பலி; சிக்கினார் லாரி டிரைவர்
/
விபத்தில் புதுப்பெண் பலி; சிக்கினார் லாரி டிரைவர்
ADDED : பிப் 28, 2025 12:24 AM

திருப்பூர்; ஊத்துக்குளியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் புதுப்பெண் இறந்தார். இதுதொடர்பாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட வாகனத்தை கண்டறிந்து, லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி - செங்கப்பள்ளி, சென்னிமலைபாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா, 22. இவருக்கு மார்ச், 2ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. கடந்த, 22ம் தேதி மாலை தனது தாய் மற்றும் அக்கா மகன் ஆகியோரை டூவீலரில் அழைத்து கொண்டு சென்றார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் நிர்மலா காயமடைந்தார். நான்கு நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். குடும்பத்தினர் புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரித்தனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும், அந்த நபரையும் போலீசார் கண்டுபிடிக்க அலட்சியமாக இருப்பதாக கூறி குடும்பத்தினர், உறவினர், கிராமத்தினர் ஊத்துக்குளியில் நேற்று முன்தினம் மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்தது. பின், அவர்களை சமாதனப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக 'சிசிடிவி' பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், டூவீலர் மீது லாரி மோதியது தெரிந்தது. தொடர் விசாரணையடுத்து கடலுாரை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோ, 41 என்பவரை கைது செய்தனர்.
திருப்பூரில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற போது, டூவீலர் மீது மோதியது தெரிந்தது.