/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிட்ஷோ': தொழில்துறையினர் ஆர்வம்
/
'நிட்ஷோ': தொழில்துறையினர் ஆர்வம்
ADDED : ஆக 09, 2024 10:55 PM

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, 'டாப் லைட்' மைதானத்தில், 22வது 'நிட்ஷோ' கண்காட்சி நேற்று துவங்கியது. ஐந்து மெகா அரங்குகளில் அமைந்துள்ள, 400 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, சீனா, ஜப்பான், தைவான், கொரியா, போர்ச்சுக்கல், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பின்னலாடை இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள், இயந்திரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளன. துவக்க நாளான நேற்றே தொழில்துறையினரும், தொழில் முனைவோரும் அதிகளவில் ஆர்வம்பொங்கப் பார்வையிட்டனர்.
நுாலிழையை பின்னல் துணியாக மாற்றும் நவீன 'நிட்டிங்' இயந்திரங்கள்; பின்னல் துணிக்கு சாயமிடும் 'இங்க்' வகைகள்; மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு கைகொடுக்கும் 'டிஜிட்டல் பிரின்டிங்' இயந்திரங்கள்; 'பிரின்டிங் இங்க்' வகைகள்; எலாஸ்டிக் உற்பத்தி இயந்திரங்கள்;
எலாஸ்டிக் இணைப்பு இயந்திரம் மற்றும் பின்னலாடை உற்பத்தியில், புதிதாக அறிமுகமாகியுள்ள தையல் இயந்திரங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர், ஒவ்வொரு இயந்திரத்தையும் இயக்கி பார்க்கும் வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ளன.
பலவகை இயந்திரங்கள்
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பின்னலாடைத்துறையின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தேவையான, தானியங்கி இயந்திரங்கள் அதிகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 'லேபிள்' வகைகள்; நவீன 'பாலிபேக்', மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கான, பிரின்டிங் மெட்டீரியல்கள், ஸ்டிக்கர் பிரின்டிங் பொருட்கள், 'ரோப்', மக்கும் தன்மையுடன் கூடிய 'டேக்' வகைகள், சோலார் கட்டமைப்பு இயந்திரங்கள்; 'லேசர் கட்டிங்' இயந்திரங்கள், ஆடைகளை அயர்ன் செய்து, மடித்து கொடுக்கும் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
உள்ளூர் தயாரிப்பு
இயந்திரங்கள்
கடந்த சில ஆண்டுகளாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் துவங்கப்பட்ட நிறுவனங்கள், நவீன டிஜிட்டல் பிரின்டிங்' மெஷின்களை காட்சிக்கு வைத்துள்ளன.
இத்தகைய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. முதல் நாளான நேற்றே, தொழில்துறையினர், மாணவ, மாணவியர் ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றனர். விடுமுறை நாளான நாளை, பார்வையாளர்கள் அலைமோதும் என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி நேரம்
கண்காட்சி, காலை, 10:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 மணி வரை நடக்கும். வரும், 11ம் தேதி மாலை வரை கண்காட்சி நடைபெறும்.