/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
என்னை யாராலும் பிடிக்க முடியாது சவால் விட்டவரை 'அள்ளிய' போலீஸ்
/
என்னை யாராலும் பிடிக்க முடியாது சவால் விட்டவரை 'அள்ளிய' போலீஸ்
என்னை யாராலும் பிடிக்க முடியாது சவால் விட்டவரை 'அள்ளிய' போலீஸ்
என்னை யாராலும் பிடிக்க முடியாது சவால் விட்டவரை 'அள்ளிய' போலீஸ்
ADDED : ஆக 01, 2024 11:48 PM

திருப்பூர்:திருப்பூர், சந்திராபுரம் டாஸ்மாக் கடை விற்பனை பணத்துடன், ஜூன் 3ம் தேதி இரவு, கடை கண்காணிப்பாளர் தனபால், 41, டூ - வீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், தனபாலிடம் கத்தி முனையில், 2.50 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர்.
தனிப்படை போலீசார் விசாரித்து, வழிப்பறியில் தொடர்புடைய அந்தோணி, 19, கல்யாணி, 22, வசந்தகுமார், 24, செங்காவிரி, 28, ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடம் விசாரித்த போது, இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் மதுரையை சேர்ந்த வள்ளிநாயகம், 33, என்பது தெரியவந்தது.
அவரை பற்றி விசாரித்த போது, கூட்டாளிகள் தெரிவித்த தகவலால் போலீசார் திடுக்கிட்டனர். 'என்னை யாரும் பிடிக்க முடியாது. முடிந்தால் பிடிக்கட்டும் பார்க்கிறேன்' என்று அவர் கூட்டாளிகளிடம் சவால் விட்ட தகவல் போலீசாரை எரிச்சலடைய வைத்தது. இதையடுத்து, இரண்டு மாதமாக கண்காணித்து, நேற்று மதுரையில் இருந்து பஸ்சில் வந்த வள்ளிநாயகத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசார் கூறியதாவது:
வள்ளிநாயகம் மீது மூன்று கொலை, ஐந்து கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி என, 30 வழக்குகள் உள்ளன. இதற்கு முன் சிலமுறை கைதாகி உள்ளார். அவர் மொபைல்போன் பயன்படுத்த மாட்டார். வீடு, வாசல் கிடையாது. திருட்டு, வழிப்பறியில் கிடைத்த பணத்தில் மது குடித்து, உல்லாசமாக சுற்றித்திரிவார். காடுகளில் தான் பதுங்கி இருப்பார்.
கூட்டாளிகளை அவராக தொடர்பு கொண்டால் தான் உண்டு. இதனால் டாஸ்மாக் வழிப்பறி வழக்கில், அவரது கூட்டாளிகளை பிடித்த போதும், வள்ளிநாயகத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது தொடர் கண்காணிப்பில், மதுரையில் இருந்து பஸ்சில் வருவது தெரிந்து, டோல்கேட்டில் ஒவ்வொரு பஸ்சாக ஏறி, சோதனை நடத்தியதில், ஒரு பஸ்சில் கடைசி இருக்கையில் ஹாயாக துாங்கிக் கொண்டிருந்தவரை கைது செய்தோம்.
அப்போது அவரிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். அவருடன் தொடர்புடைய கார்த்தி, 27, என்பவரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.