/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல் சுற்று முடிந்தும் தண்ணீர் கிடைக்கல! அடிவள்ளி விவசாயிகள் புகார்
/
முதல் சுற்று முடிந்தும் தண்ணீர் கிடைக்கல! அடிவள்ளி விவசாயிகள் புகார்
முதல் சுற்று முடிந்தும் தண்ணீர் கிடைக்கல! அடிவள்ளி விவசாயிகள் புகார்
முதல் சுற்று முடிந்தும் தண்ணீர் கிடைக்கல! அடிவள்ளி விவசாயிகள் புகார்
ADDED : ஆக 28, 2024 02:29 AM

உடுமலை;பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக விருகல்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்குட்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த, 20ல், பாசனத்துக்கு விருகல்பட்டி கால்வாயில், தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் 'ஷிப்ட்'டில், அடிவள்ளி கிராமத்துக்குட்பட்ட, 7 மடைகளுக்கு பாசன நீர் வழங்கப்பட்டது.
ஆனால், 'ஷிப்ட்' நிறைவு பெற்றும், 70 ஏக்கருக்கும் அதிகமான மக்காச்சோள விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை உடுமலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு, அடிவள்ளி கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள் திரண்டு வந்தனர்.
விருகல்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சி மண்டல குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் விவசாயிகள் சார்பில், அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
மனுவில், 'விருகல்பட்டி கால்வாய் பாசனத்துக்குட்பட்ட, 170 ஏக்கரில், 70 ஏக்கர் நிலத்துக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், மக்காச்சோளம் சாகுபடி செய்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடவு செய்த விதைகள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, சில மடைகளில், பெரிய குழாய் அமைத்து, தண்ணீரின் போக்கை மாற்றியது முக்கிய காரணமாகும். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் பாசன நீரும் கிடைக்காமல், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதித்துள்ளனர்.
எனவே, விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட குழாய்களை மாற்றியமைக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் தரப்பில், 'விவசாயிகள் புகார் மனு குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.