/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து உறுதுணை!'
/
'குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து உறுதுணை!'
'குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து உறுதுணை!'
'குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து உறுதுணை!'
ADDED : செப் 04, 2024 02:13 AM

மருத்துவமும், அறிவியலும் வளர்ந்திராத காலத்தில் கூட 'உணவே மருந்து' என்ற சூழலில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம், கீரை, பருப்பு உள்ளிட்ட உணவு முறை வாயிலாக, உடல் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் மனிதர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
காலப்போக்கில், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில், இன்றைய தலைமுறை ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை இழந்து வருகின்றனர். 'பாஸ்ட் புட்' கலாசாரத்துக்கு அடிமையாகிப்போன, இளம் தலைமுறை தங்களின் நடுத்தர வயது தொட்டவுடன் 'மருந்தே உணவு' என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சத்தான உணவுப்பழக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் அபாயத்தில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தான், ஆண்டுதோறும், செப்., 1 முதல், 7ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு என்பது, பிறக்கும் குழந்தையில் இருந்து பாதிப்பை ஏற்படுத்த துவங்குகிறது என்ற நிலையில், கர்ப்பிணிகள் மத்தியில் சமச்சீர் மற்றும் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு அதி முக்கியத்துவம் பெறுகிறது. இதை கருத்தில், திருமுருகன்பூண்டி ரோட்டரி சார்பில், கடந்த, 2020ல், என்ற திட்டம் துவங்கப்பட்டு, தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பணிகளுக்கு ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், கடந்த ஐந்தாண்டாக, மாதந்தோறும், பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பவுடர் உள்ளிட்ட உணவு வழங்கப்படுகிறது.
குழந்தை வளர்ச்சிக்கு
மிகவும் உறுதுணை
திட்டத்தை முன்னெடுத்த மகப்பேறு மருத்துவர் அனிதா விஜய் கூறியதாவது:
கர்ப்பிணிகளுக்கு போலிக் ஆசிட், கால்சியம், புரோட்டின் ஆகியவை மிகமிக முக்கியம். போலிக் ஆசிட் என்பது, பிறக்கும் குழந்தையின் மூளை, முதுகு தண்டு வட வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. கருவுறுதலுக்கு, 3 மாதம் முன்னரே, 'போலிக் ஆசிட்' மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
இதனால், மூளை வளர்ச்சி மற்றும் முதுகுதண்டு வடம் வளர்ச்சி குறைபாடு இல்லாமல் குழந்தை பிறக்கும். இரும்புச் சத்து, ரத்த ஓட்டத்துக்கு அவசியம்; தாயின் ஹீமோகுளோபின் வாழியாக குழந்தைக்கு ஆக்ஸிஜன் நன்றாக பாயும்; குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும். குழந்தையின் தசை வளர்ச்சிக்கு புரோட்டின் சத்து அவசியம்.
கர்ப்பிணிகள் மட்டுமின்றி, சூரிய ஒளியில் இருந்து, 'வைட்டமின் டி-3' குறைபாடு என்பது அனைவருக்கும் இருக்கிறது; உடல் மீது சூரிய ஒளிபடுவதே இல்லை. 'வைட்டமின் டி-3' நன்றாக இருந்தால், உடலில் தானாகவே கால்சியம் உற்பத்தியாக உதவும்.
எனவே, ஊட்டச்சத்து மிக்க கீரை, காய்கறிகள் உட்கொள்ள வேண்டும். தினமும் பருப்பு வகை, முளைகட்டின பருப்பு வகை உணவு உட்கொள்ள வேண்டும். தினமும் மாறுபட்ட இரு வகை காய்கறி, பழங்கள் உட்கொள்ள வேண்டும். வாரத்துக்கு இரு நாள் முட்டை, ஒரு நாள் இறைச்சி உணவு எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.--------------
- செப்., 1 - 30, தேசிய ஊட்டச்சத்து மாதம்