/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடல் பருமன் கருவுறுதலை தடுக்கும்!
/
உடல் பருமன் கருவுறுதலை தடுக்கும்!
ADDED : ஜூலை 24, 2024 11:56 PM

தாம்பத்ய வாழ்க்கையை முழுமை பெறச்செய்வது, குழந்தை வரம். குழந்தையின்மை என்ற குறை, பலரது வாழ்க்கையை ஆறாத சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது. இந்த சோகத்தை மகிழ்ச்சியாக மாற்ற, செயற்கை முறை கருத்தரித்தல் மருத்துவ முறை பேருதவி புரிகிறது.
இந்த மருத்துவ முறையின் நன்மையை உலகறியச் செய்யும் நோக்கில் தான், ஆண்டுதோறும், ஜூலை, 25ல், உலக கருவியலாளர் தினம், (ஐவிஎப்., தினம்) கடைபிடிக்கப்படுகிறது. இது, 'உலக செயற்கை கருத்தரித்தல் முறை' தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தினம் வலியுறுத்தும் மருத்துவ உண்மையை விளக்குகிறார், திருப்பூர், திவ்யா மருத்துவமனை பவ்யா கருத்தரித்தல் மைய தலைமை மருத்துவர் பூங்கோதை செல்வராஜ்.
கடந்த, 1978 ஜூலை, 25ல், முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான லுாயிஸ் பிரவுன் பிறந்த தினம். இந்நாள், 'உலக ஐவிஎப்., தினம்' என, கொண்டாடப்படுகிறது.
செயற்கை கருத்தரித்தல் முறை குழந்தையின்மை சிகிச்சையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பல காரணங்களால் குழந்தையில்லா தம்பதிகளாக இருந்த லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நம்பிக்கையை ஏற்படுத்தி, குழந்தை பாக்கியம் என்ற அவர்களின் கனவை நனவாக்கியது.
இதுவரை, உலகெங்கும், 80 லட்சத்துக்கும் அதிகமான டெஸ்ட் டியூப் குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த, 46 ஆண்டுகளில் செயற்கை கருத்தரித்தல் மருத்துவ முறை பல அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டிருக்கிறது.இந்நாளில், குழந்தையின்மை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டியது அவசியம். தற்போதைய வாழ்வியல் முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால், குழந்தையின்மை என்பது, 15 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
அதிக வயதில் திருமணம் செய்வது, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சின்மை, புகைபிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம் போன்றவை கருவுறுதலை பாதிக்க செய்யும்.
பெண்ணுக்கு 30 வயது நிரம்பியவுடன் கருவுறுதல் குறைய துவங்கி, 35 வயதுக்கு மேல் மிகவும் குறைந்துவிடும். எனவே, 30 வயதுக்கு மேல் இருப்பவர்கள், காலம் தாழ்த்தாமல் கருத்தரித்தல் தொடர்பான மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
உடல் பருமன் கருவுறாமைக்கு முக்கிய காரணம். ஹார்மோன் கோளாறு ஏற்படுவதுடன், கருமுட்டை தரம் குறைதல், கர்ப்பபையில் கரு தங்குவதை பாதித்தல், கர்ப்ப காலத்தில் அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களின் தாக்கம் ஆகியவை கருவுறுதலை பெரிதும் பாதிக்கும்.
ஆரோக்கியமான வாழ்வு முறை, சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சை, கருவுறுதலை சுலபமாக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
(இன்று, உலக செயற்கை கருத்தரிப்பு முறை தினம்)

