/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்கா விற்க புதுடெக்னிக்; கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரம்
/
குட்கா விற்க புதுடெக்னிக்; கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரம்
குட்கா விற்க புதுடெக்னிக்; கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரம்
குட்கா விற்க புதுடெக்னிக்; கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரம்
ADDED : ஜூலை 11, 2024 10:14 PM
உடுமலை: 'பான் பராக், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவாய் சம்பாதித்து பழகிய வியாபாரிகள், பாதசாரிகளாக மாறி, தங்களின் விற்பனையை தொடர்கின்றனர்' என கூறப்படுகிறது.
தற்போது இளைஞர்கள் மத்தியில், புகையிலை, பான்பராக், போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக, போலீசாரும், அதிகாரிகளும் சோதனை மற்றும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில்,தடை செய்யப்பட்ட பான் பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர, தற்போது அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகத்தினர் சிலர் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், பள்ளி, கல்லுாரிகள் அருகேயுள்ள கடைகளில் பான் பராக், குட்கா உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகின்றன; போலீசார், உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புதுறையினரின் தொடர் கண்காணிப்பு, பறிமுதல் மற்றும் அபராத நடவடிக்கையை தொடர்ந்து, பொது வெளியில் அவற்றை விற்பனை செய்வது, ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஆங்காங்கே சிலர் அத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதை தரும் புகையிலைப் பொருட்களை விற்று, அதன் வாயிலாக வருமானம் ஈட்டி பழகிய கடைக்காரர்கள் பலருக்கு, அத்தகைய பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களை அதிகளவில் வைத்துள்ளனர்.
கடைகளில் வைத்து அவற்றை விற்காமல், தங்கள் பாக்கெட்டில் வைத்து, பாதசாரிகள் போல அங்குமிங்கும் நடந்தபடியே, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விற்கின்றனர்.
அவர்களை கண்காணிப்பதோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ கடினம். போதை பொருட்களை விற்பவர்கள், அத்தொழிலை கைவிட்டால் மட்டுமே, முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது சம்பந்தமாக, அரசும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

