/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை; விரைவில் வழங்க வலியுறுத்தல்
/
நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை; விரைவில் வழங்க வலியுறுத்தல்
நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை; விரைவில் வழங்க வலியுறுத்தல்
நத்தம் நிலத்துக்கு 'ஆன்லைன்' சேவை; விரைவில் வழங்க வலியுறுத்தல்
ADDED : ஆக 04, 2024 10:03 PM
உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, நத்தம் நிலத்துக்கான ஆன்லைன் பணிகளை விரைந்து முடித்து, நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அரசு, ரயத்துவாரி நிலத்துக்கான விபரங்களை, கடந்த பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் வாயிலாக பராமரிக்கிறது. ஆன்லைன் சேவையும் கிடைத்து வருகிறது.
ஆனால், பழைய கிராமங்கள், குடியிருப்புகள் இருக்கும் நத்தம் நிலம் தொடர்பான விபரம், புல வரைபடம் அனைத்தும், கிராம அளவிலும், சர்வே துறையிலும் பதிவேடுகளாக மட்டுமே பராமரிக்கப்பட்டது.
இதனையும், ஆன்லைன் சேவைக்கு உட்படுத்தும் வகையில், 2017ம் ஆண்டில், நத்தம் தொடர்பான விபரம் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பல கட்ட சரிபார்ப்புக்கு பின், ஆன்லைன் சேவை வழங்கப்பட உள்ளது.
ஆனால், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், நத்தம் நிலம் தொடர்பான விபரங்கள் பதிவேற்றம் தாமதம் காரணமாக இழுபறியாகி வருகிறது.
இதனால், சொத்து ஆவணம் பராமரித்தல், விற்பனை, ஆவண பரிமாற்றம் செய்ய முடியாமல், நத்தம் நில உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நத்தம் நிலம் தொடர்பான விபரங்கள் ஆன்லைன் வசதி, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி தாலுகாவில் முதல் கட்டமாக துவங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, திருப்பூர் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம் தாலுகா விபரம் இறுதி செய்யப்பட்டு, ஆக.,மாதம் முதல் அமலுக்கு வரும்.பொதுமக்கள், தங்களது நத்தம் சொத்துக்கான சிட்டா, நகலை பார்வையிட்டு, சரிபார்த்துக் கொள்ளலாம். தேவையற்ற பதிவுகள் இருந்தால், ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பித்து முறைப்படுத்திக்கொள்ளலாம்.
உடுமலை, மடத்துக்குளம தாலுகா நத்தம் விபரம், மாவட்ட தேசிய தகவலியல் மையம் வாயிலாக, மாநில தகவல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சரிபார்த்த பிறகு, நத்தம் ஆன்லைன் சேவை அமலுக்கு வரும்.இ-சேவை வாயிலாகவோ, மொபைல் போன் வாயிலாகவே, மாவட்டம், தாலுகா, கிராமத்தை தேர்வு செய்து, தங்களது புல எண்ணில் உள்ள விவரத்தை பார்வையிடலாம். பதிவிறக்கம் செய்யலாம். விரைவில், நிலத்துக்கான புல வரைபடமும் ஆன்லைன் சேவையாக கிடைக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.