/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில் பயணிகளுக்கு குடிநீர் உறுதிப்படுத்த உத்தரவு
/
ரயில் பயணிகளுக்கு குடிநீர் உறுதிப்படுத்த உத்தரவு
ADDED : ஏப் 27, 2024 12:44 AM
திருப்பூர்;'வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை, ஸ்டேஷன் மாஸ்டர்கள் உறுதி செய்ய வேண்டும்,' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு, தேவையான அளவு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய ஸ்டேஷன் அளவில் கண்காணிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ரயில்வே ஜங்ஷன் மற்றும் ஸ்டேஷன்களில், குடிநீரின் இருப்பின் கொள்ளளவு, பிளாட்பார்ம்களில் குடிநீர் குழாய்கள் எண்ணிக்கை, வந்து செல்லும் பயணிகளுக்கு போதுமானதாக குடிநீர் இருக்குமா அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் கூடுதலாக குடிநீர் கேட்டு பெற வேண்டுமா, டேங்கர் லாரிகள் மூலம் கூடுதல் குடிநீர் பெற வேண்டுமா என்பது குறித்து அந்தந்த ஸ்டேஷன் அளவில் முடிவெடுக்க வேண்டும்.
ரயில் பயணிகளின் குடிநீர் தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண, 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான குழு அமைக்க வேண்டும்.
ரயில் பயணிகளுக்கு தேவையான குடிநீர் (தண்ணீர் பாட்டில்) பிளாட்பார்மில் அனைத்து விற்பனை ஸ்டால்களில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூர், ஏப். 27-
வெப்ப அலை பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உரிய வழிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
காற்றோட்டமான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியவேண்டும். இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்பது சிறந்தது. வெளியே செல்லும்போத, மறக்காமல் குடை எடுத்துச்செல்லலாம்.
தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். பயணங்கள் உள்பட வெளியே செல்லும்போது, கைவசம் ஓ.ஆர்.எஸ்., கரைசல், இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சை ஜூஸ் வைத்திருக்கவேண்டும். தேவைக்கு ஏற்ப அவற்றை பருகி, நீரிழப்பை தவிர்க்கலாம்.
குழந்தைகளுக்கும், சீரான இடைவெளியில், போதுமான அளவு நீராகாரம் கொடுக்கவேண்டும். வெப்பம் சார்ந்த நோய் பாதிப்புகள் உள்ளனவா என, பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் நிற சிறுநீர், நீரிழப்பை வெளிப்படுத்தும்.
கூரை வீடுகளில் உள்ள மின் ஒயர்கள் உருகி, மின்கசிவால், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விலை உயர்ந்த பொருட்கள், நிலம் சார்ந்த ஆவணங்கள் உட்பட முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்.
முதியவர் உடல் நிலையை தினமும் இருமுறை பரிசோதிக்க வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்க வேண்டும்; குளிர்ந்த நீரில் குளிக்கச் செய்ய வேண்டும். நுாறு நாள் பணியாளர்கள், மதியம், 12:00 மணிக்குமேல் பணிக்குச் செல்ல வேண்டாம்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில்
கூடுதல் குடிநீர் குழாய்கள் தேவை
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம், ஓய்வறை, லிப்ட், படிக்கட்டு பகுதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் உள்ளது. பயணிகள் அதிகளவில் இருக்கையில் அமரும் இரண்டாவது மற்றும் முதல் பிளாட்பார்ம், பயணிகள் நுழையும் இடம் உள்ளிட்ட ஐந்து முதல் எட்டு இடங்களில் கூடுதலாககுடிநீர் குழாய்களை அமைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

