/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அம்ரித் பாரத்' பணிகள் வேகமெடுக்க உத்தரவு
/
'அம்ரித் பாரத்' பணிகள் வேகமெடுக்க உத்தரவு
ADDED : ஆக 16, 2024 12:19 AM

திருப்பூர் : மத்திய ரயில்வே அமைச்சகத்தின், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு பிளாட்பார்ம் மற்றும் வெளிவளாகம், ரயில்வே ஸ்டேஷன் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.
முதல் பிளாட்பார்மில் பணி, 50 சதவீதம் கூட முடிக்காத நிலையில், அவசர கதியில் இரண்டாவது பிளாட்பார்மில் பணி துவங்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார்சின்ஹா, உதவி கோட்ட மேலாளர் கிருஷ்ண பண்டிட் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின் குழுவினர், 'திருப்பூரில் பணிகள் மந்தமாக நடக்கிறது. அம்ரித் பாரத் பணி வேகமெடுத்தால் தான், பயணிகளுக்கு பயன்பெறும் வகையில் ஸ்டேஷனை மாற்ற முடியும். கட்டுமான பணி இப்படி நடந்தால் எப்போது முடிப்பது,' என அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன், ஒவ்வொரு நிலையிலும் பணிகளை வேகப்படுத்தி, ஒரு மாதத்துக்குள் நிலை குறித்து அறிக்கையை தர வேண்டும் என உத்தரவிட்டனர்.
கடந்த ஜனவரியில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு நடத்தி, 'அம்ரித் பாரத்' பணி தாமதமாக நடப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர், பணி சுறுசுறுப்பானதாக தெரியவில்லை. இந்நிலையில், ஆய்வு நடத்திய சேலம் கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் குழுவும் திருப்பூரில் ஆய்வு நடத்தி, அதிருப்தி தெரிவித்துள்ளது.

