/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு 32,770 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
/
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு 32,770 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு 32,770 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
அமராவதியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவு 32,770 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
ADDED : பிப் 24, 2025 09:59 PM

உடுமலை,; அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு கூடுதல் நாட்கள் நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
அமராவதி பழைய ஆயக்கட்டு, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில், இரண்டாம் போகம், சம்பா பருவ நெல் சாகுபடிக்குக்காக, டிச.,6 முதல், நேற்று வரை ( பிப்., 24 வரை) 80 நாட்களில், 41 நாட்கள் தண்ணீர் திறப்பு, 39 நாட்கள் அடைப்பு என்ற சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்க அரசு உத்தரவிட்டது.
சம்பா நெல் சாகுபடிக்கு, 120 நாட்கள் நீர் தேவை உள்ள நிலையில், 80 நாட்கள் மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது.
தற்போது இப்பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்களை காக்க, கூடுதல் நாட்கள் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, இன்று முதல், வரும், மார்ச் 30 வரை, தகுந்த இடைவெளி விட்டு, 21 நாட்களுக்கு, அமராவதி ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 300 கனஅடி வீதம், 544.32 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல், அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் சீதோஷ்ண நிலை மாற்றம், இலை கருகல், வேர் அழுகல் நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், நடவு செய்த, ஒரு மாதத்தில் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் நெற் பயிர்கள் கருகிய நிலையில், விவசாயிகள் மீண்டும் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
மேலும், இப்பகுதியிலுள்ள நெல், கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்களை காக்க கூடுதல் நீர் வழங்க வேண்டும், என புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் அடிப்படையில், இன்று ( 25ம் தேதி) முதல், வரும் மார்ச், 20 வரை, தகுந்த இடைவெளி விட்டு, 10 நாட்களுக்கு, அமராவதி பிரதான கால்வாய் வழியாக, வினாடிக்கு, 440 கனஅடி வீதம், 380.16 மில்லியன் கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் வாயிலாக, பழைய ராஜவாய்க்கால் பாசனம் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 32 ஆயிரத்து, 770 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது.