/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசாணை எண்: 243ஐ நீக்க வேண்டும்!
/
அரசாணை எண்: 243ஐ நீக்க வேண்டும்!
ADDED : ஆக 01, 2024 01:33 AM

திருப்பூர் : தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ ஜாக்' அமைப்பினர், தமிழக அரசிடம், 31 அம்ச கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்த, 'டிட்டோ ஜாக்' திட்டமிட்டுள்ள நிலையில், தினசரி, 12 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் முற்றுகையில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. முற்றுகையின் முதல் நாளில், முற்றுகையில் ஈடுபட்ட மாவட்டங்களில் திருப்பூரும் இடம் பெற்றிருந்தது.
இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தெற்கு மாநகர செயலாளர் கனகராஜ் கூறியதாவது:
பள்ளிக்கல்வி துறை, ஒன்றிய அளவிலான பதவி உயர்வு வழங்கி வந்த நிலையில், தற்போது, 243 என்ற அரசாணையை வெளியிட்டு, மாநில அளவிலான பதவி உயர்வு வழங்குகிறது. கடந்த, 2012க்கு பின் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படாத நிலையில், இந்த அரசாணையால், ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம், வெகு துாரத்துக்கு பணி மாறுதல் பெறக்கூடிய சூழல் ஏற்படும்.
இந்த அரசாணையால் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. 'இ.எம்.ஐ.எஸ்' பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பது உட்பட, 31 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம்.
கல்வித்துறை அமைச்சர், செயலர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், 'எமிஸ்' பணி உள்ளிட்ட, நிதி சாராத, 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக கூறியிருந்த கல்வித்துறை அமைச்சர், அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் நடந்த முற்றுகையில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். அன்றைய தினம், 2,500 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்திருந்தனர். இவ்வாறு, அவர் கூறினார்.