/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆயக்கட்டில் நெல் விதைப்பண்ணைகள்; விதைச்சான்றளிப்பு துறையினர் ஆய்வு
/
அமராவதி ஆயக்கட்டில் நெல் விதைப்பண்ணைகள்; விதைச்சான்றளிப்பு துறையினர் ஆய்வு
அமராவதி ஆயக்கட்டில் நெல் விதைப்பண்ணைகள்; விதைச்சான்றளிப்பு துறையினர் ஆய்வு
அமராவதி ஆயக்கட்டில் நெல் விதைப்பண்ணைகள்; விதைச்சான்றளிப்பு துறையினர் ஆய்வு
ADDED : மார் 05, 2025 10:19 PM

உடுமலை ; அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில், பல ரகங்களில் அமைக்கப்பட்டுள்ள நெல் விதைப்பண்ணைகளை, விதைச்சான்றளிப்புத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
உடுமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகளை, திருப்பூர் மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும்உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
விதைச்சான்றளிப்பு துறை உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது:
விவசாயத்தில் அடிப்படை இடுபொருள் காரணியான விதை உற்பத்தியை பெருக்குவதிலும், கண்காணிப்பதிலும் விதைச்சான்றளிப்பு துறையின் பங்கு முக்கியமானதாகும்.
தரமான விதை உற்பத்தி மட்டுமின்றி, இயற்கை விவசாயத்தினை அதிகரிக்க விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் இத்துறை ஈடுபட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும், 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைபயிர்கள், எண்ணெய் வித்து பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைத்து, 72 ஆயிரம் டன் சான்றுபெற்ற விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.
வேளாண் பல்கலை மற்றும் ஆராய்ச்சிநிலையங்கள் வாயிலாக அனைத்து பயிர்களிலும், குறைந்த வாழ்நாள், அதிகமகசூல், நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புத்திறன், அதிக மணிகளின் எண்ணிக்கை, எடையில் உற்பத்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டு, விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
தரமான விதைகள் உற்பத்தி செய்யும் வகையில், வல்லுனர் நிலை, ஆதாரநிலை - 1, 2, 3 ஆகிய நிலைகளில் விதைப்பண்ணைகள் அமைத்து,பூப்பருவம், முதிர்ச்சிப்பருவங்களில் விதைச்சான்று அலுவலர் களால் வயலாய்வு செய்யப்பட்டு, பிற ரக கலவன்கள் இருந்தால் நீக்கப்பட்டு, வயலாய்வில் தேர்ச்சி பெறும் விதைப்பண்ணைகள் அறுவடைக்கு அனுமதிக்கப்படுகிறது.
அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளவிதைப்பண்ணைகள், தற்போது பூப்பருவம் மற்றும் முதிர்ச்சிப்பருவத்தில் உள்ளது. விதை உற்பத்தி நிலையின், சங்கிலித்தொடரில், முதன்மையாக உள்ள வல்லுனர் விதைப்பண்ணைகளில் விதைச்சான்றுத்துறை அலுவலர் குழுஆய்வு மேற்கொண்டது.
மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதிகளில், கோ-50, கோ-43, கோ-51, ஏ.டி.டி.,45, ஐ.ஆர்.,-20, சாவித்திரி, சி.ஆர்.,-1009, ஏ.டி.டி.,-16, 46, 54, 42 ஆகிய ரகங்களில் உள்ள வல்லுனர் விதைப்பண்ணைகள் வயலாய்வு செய்யப்பட்டது.
வயல் தரத்தில் தேறாத விதைப்பண்ணைகள் தள்ளுபடிசெய்யப்படும். இதன் வாயிலாக, தரமான, தகுதியுள்ள விதைப்பண்ணைகள் மட்டுமே அறுவடைக்கு அனுமதிக்கப்படும்.
அறுவடைக்கு பின், அரசு அனுமதி பெற்ற விதை சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்தி செய்யப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்ற, விதை பரிசோதனை நிலையங்களில் பகுப்பாய்வு செய்யப்படும். முளைப்புத்திறன், பிற ரக கலவன், ஈரப்பதம், புறத்துாய்மை ஆகிய இனங்களில் தேர்ச்சி பெறும் விதைக்குவியல்கள், சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
விவசாயிகள், சான்று பெற்ற தரமான விதைகளை சாகுபடி செய்து, அதிக மகசூல் பெறலாம். விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், அருகிலுள்ள வட்டாரவேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவித்தார்.
ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.