/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாக்கடையாக மாறிய ராஜவாய்க்கால் குமரலிங்கத்தில் வேதனை
/
சாக்கடையாக மாறிய ராஜவாய்க்கால் குமரலிங்கத்தில் வேதனை
சாக்கடையாக மாறிய ராஜவாய்க்கால் குமரலிங்கத்தில் வேதனை
சாக்கடையாக மாறிய ராஜவாய்க்கால் குமரலிங்கத்தில் வேதனை
ADDED : மார் 06, 2025 09:49 PM
உடுமலை; கழிவு நீர் கலப்பால், சாக்கடையாக மாறிய ராஜவாய்க்காலை மீட்க பொதுப்பணித்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, குமரலிங்கம் பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மடத்துக்குளம் அருகேயுள்ள குமரலிங்கம் சுற்றுப்பகுதியில், அமராவதி ஆயக்கட்டு பாசனத்துக்கு, நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
ஆற்றில் இருந்து பிரிந்து நெல் வயலுக்கு செல்லும் கால்வாயின் முக்கியத்துவம் கருதி, முற்காலத்தில், அக்கால்வாய்க்கு 'ராஜவாய்க்கால்' என பெயரிட்டிருந்தனர்.
அதன் பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. உணவை விளைவிக்க உதவும் பாசன நீருக்கும், விவசாயிகளுக்கும் அப்போது அத்தகைய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
தற்போது, ராஜவாய்க்கால் சாக்கடையாக மாற்றப்பட்டு, அப்பகுதிக்கே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. குமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் இருந்து, நேரடியாக கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது.
சந்தானதுறை பகுதியில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு, இறைச்சிக்கழிவுகளும், காலி மதுபாட்டில்களும், நேரடியாக கால்வாயில், கொட்டப்படுகிறது. இதனால், பாசன நீர் முழுவதுமாக மாசடைந்து விடுகிறது.
சோதனை மேல் சோதனையாக மாசடைந்த, துர்நாற்றம் வீசும் கழிவுநீரும் நெல் வயலுக்கு செல்லாத அளவுக்கு ஆகாயதாமரை செடிகள் கால்வாயை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது.
குறித்த நேரத்தில், நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சாவிட்டால், பயிர்கள் கருகி விடும் அபாயம் உள்ளது.
பொதுப்பணித்துறை, பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், விவசாயிகளே நேரடியாக கழிவு நீர் தேங்கியுள்ள கால்வாயில் இறங்கி, ஆகாயதாமரை செடிகளை அகற்றுகின்றனர்.
இத்தகைய முக்கிய பிரச்னைக்கு, நீண்ட காலமாக பேரூராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியமாக இருப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.