/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., பாசனத்துக்கு 16ல் நீர் திறக்க திட்டம் இன்று காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
/
பி.ஏ.பி., பாசனத்துக்கு 16ல் நீர் திறக்க திட்டம் இன்று காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
பி.ஏ.பி., பாசனத்துக்கு 16ல் நீர் திறக்க திட்டம் இன்று காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
பி.ஏ.பி., பாசனத்துக்கு 16ல் நீர் திறக்க திட்டம் இன்று காண்டூர் கால்வாயில் நீர் திறப்பு
ADDED : ஆக 03, 2024 07:34 PM

உடுமலை:பி.ஏ.பி., திட்டத்தில் காண்டூர் கால்வாய் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தொகுப்பு அணைகளிலிருந்து நீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, 49.3 கி.மீ.,துாரம் உள்ள காண்டூர் கால்வாய் வழியாக, நீர் கொண்டு வரப்பட்டு, திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள காண்டூர் சிதிலமடைந்து, நீர் விரயம் அதிகரித்தது. அதனால், கால்வாயை முழுமையாக புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், விடுபட்ட பகுதிகள் புதுப்பிக்கும் பணி, முதல் மண்டல பாசனம் நிறைவு பெற்றதும், கடந்த மே மாதம், நல்லாறு அருகே துவங்கி, ஐந்து இடங்களில் நடந்தது.
பழைய கட்டுமானங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, கம்பிகள் கட்டி முழுமையாக கான்கிரீட் அமைக்கும் பணி, இரவு, பகலாக நடந்தது. அதே போல், 9வது கி.மீ.,ல் பனப்பள்ளம் பகுதியிலும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணை நிரம்பியுள்ளது. பரம்பிக்குளம் அணையும் நிரம்பி வருகிறது. தொகுப்பு அணைகள் நிரம்பி நீர் வீணாவதை தடுக்கவும், பாசன பகுதிக்கு நீர் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காண்டூர் கால்வாய் பணி துரிதப்படுத்தப்பட்டது. தற்போது, பணிகள் நிறைவு செய்யபட்டு, கால்வாய் முழுவதும் தேங்கியுள்ள மண் மற்றும் கழிவுகள் அகற்றும் பணியும், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், சோதனை பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இன்று, பரம்பிக்குளம் அணையிலிருந்து, துாணக்கடவு வழியாக, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் கொண்டு வந்து, மாலை, 4:00 மணிக்குள் காண்டூர் கால்வாயில் நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
காண்டூர் கால்வாயில் செல்லும் நீர், நாளை (5ம் தேதி) திருமூர்த்தி அணைக்கு வந்து சேரும். படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, அணையில் நீர் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். வரும், 16ம் தேதி பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.