/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: கிடப்பில் போட்ட பயணியர் கோரிக்கை
/
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: கிடப்பில் போட்ட பயணியர் கோரிக்கை
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: கிடப்பில் போட்ட பயணியர் கோரிக்கை
திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: கிடப்பில் போட்ட பயணியர் கோரிக்கை
ADDED : மே 02, 2024 11:29 PM

உடுமலை:திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்ற, உடுமலை பகுதி பயணியரின் கோரிக்கையை, ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
கோவை - திண்டுக்கல் அகல ரயில்பாதையாக்கப்பட்ட பின், கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில் பயணத்தையே பொதுமக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். கோடை காலத்தில் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதில், உடுமலை வழியாக, பாலக்காடு - திருச்செந்துார் ரயில் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. உடுமலை, பழநி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியே திருச்செந்துார் சென்றடைகிறது.
திருச்செந்துார் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணியர் இந்த ரயிலால் பயனடைகின்றனர். குறிப்பாக செவ்வாய்கிழமைகளில், திருச்செந்துார் கோவிலில் தரிசனம் செய்ய, அதிகளவு பக்தர்கள் விரும்புகின்றனர்.
மேலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், இந்த ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், போதிய பெட்டிகள் இல்லாததால், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் ஏறும் பயணியர் நின்று கொண்டே பயணிக்கும் நிலை உள்ளது. சிலர் ரயிலில் ஏற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, திருச்செந்துார் ரயிலில், கூடுதல் பெட்டிகள் சேர்த்து இயக்க வேண்டும் என, உடுமலை பகுதி பயணியர் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடப்படுகிறது.
ஆனால், தெற்கு ரயில்வே தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கான வசதிகளை மேம்படுத்தி, பயணியர் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் முன் வர வேண்டும்.