/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டில் சாதித்த அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி
/
விளையாட்டில் சாதித்த அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி
ADDED : ஆக 25, 2024 12:46 AM

கடந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மாணவர் தேர்ச்சி பெறாததால், தடுமாறி போன அனுப்பர்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி, விளையாட்டில், சாதனை பயணத்தை துவக்கியுள்ளது.
திருப்பூர் வடக்கு குறுமைய மாணவர் கோகோ, மாணவியர் கோ கோ போட்டி , 17 வயது பிரிவில் வாகை சூடியது. சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளியை எதிர்கொண்ட அனுப்பர்பாளையம் பள்ளி மாணவர் அணி, 11 - 3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி கண்டது.
மாணவியர், 17 வயது பிரிவில், வீரசிவாஜி பள்ளி அணியை, 11 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றனர். 14 மற்றும், 19 வயது மாணவியர் பிரிவில், அனுப்பர்பாளையம் பள்ளி அணி, 2வது இடம் பெற்றது. வெற்றி தேடித் தந்த மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் பானுபிரேம்குமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவரே காரணம்
பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அனிதா கூறுகையில், ''பள்ளியில், 36 பேர் கொண்ட மூன்று மாணவியர் அணி, 24 பேர் கொண்ட மாணவர் அணி என, 50 பேர் கோகோ போட்டிக்கு தயார்படுத்தி வைத்துள்ளோம். தினமும் மாலை இரண்டு மணி நேரம் மாணவ, மாணவியருக்கு தவறாமல் பயிற்சி அளிக்கிறோம். வீரர், வீராங்கனையர் உத்வேகமாக விளையாடியது தான், வெற்றிக்கு காரணமானது. தொடர்ந்து, திறமையான கோகோ அணியை உருவாக்குவோம்,'' என்றார்.
தேவை நியமனம்
இப்பள்ளியில், 1,235 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். ஆனால், ஒரேயொரு விளையாட்டு ஆசிரியர் மட்டுமே உள்ளார். கூடுதலாக உடற்கல்வி ஆசிரியர் நியமித்தால், இப்பள்ளி மாணவர்கள் இன்னமும் சாதித்து காட்டுவர் என்பதில் சந்தேகம் இல்லை.
----
2 படங்கள்
திருப்பூர் வடக்கு குறுமைய, 17 வயது பிரிவினருக்கான கோகோ போட்டியில் வெற்றிபெற்ற அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி மற்றும் மாணவியர் அணி.