/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்; பஸ் ஸ்டாண்டில் வேதனை
/
குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்; பஸ் ஸ்டாண்டில் வேதனை
குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்; பஸ் ஸ்டாண்டில் வேதனை
குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்; பஸ் ஸ்டாண்டில் வேதனை
ADDED : மே 07, 2024 01:21 AM

உடுமலை:பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாடு இல்லாமல் வீணாகக்கிடப்பதால், பயணியர் குடிநீருக்காக தவிக்கும் நிலை உள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதில், கிராமப்புற பஸ்களுக்காக அரை மணி நேரத்துக்கும் அதிகமாக மக்கள் காத்திருக்கின்றனர்.
மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடங்களிலும், குறைவான பஸ்களே இயக்கப்படுவதால், பயணியர் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு, காத்திருப்பவர்களுக்கு பஸ் ஸ்டாண்டில், குடிநீர் வசதி இல்லை. முன்பு, ஆனைமலை, பழநி, பொள்ளாச்சி வழித்தட பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த தொட்டிகள் மாயமான நிலையில், திருப்பூர் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக மக்கள் சிரமப்படுவது தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், சுத்திகரிப்பு கருவி பழுதடைந்து பல மாதங்களாக சீரமைக்கப்படவில்லை. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், போதிய இருக்கை வசதி இல்லாமல், மக்கள், வெயிலில் காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு குடிநீர் வசதியும் இல்லாததால், மிகுந்த சிரமப்படுகின்றனர். இது குறித்து உடுமலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்களிடையே நகராட்சி மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது.