/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழியும் பனை; பாதுகாக்க திட்டம் தேவை! இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
/
அழியும் பனை; பாதுகாக்க திட்டம் தேவை! இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
அழியும் பனை; பாதுகாக்க திட்டம் தேவை! இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
அழியும் பனை; பாதுகாக்க திட்டம் தேவை! இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 13, 2024 01:33 AM

உடுமலை;நீர்நிலைகளின் கரையில், புதர்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட காரணங்களால், பாதிக்கப்பட்டு வரும் பனை மரங்களை பாதுகாக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
உடுமலை பகுதியில், முக்கிய நீராதாரமாக ஏழு குள பாசன திட்ட குளங்கள் உள்ளன. நீண்ட காலமாக நீர் மேலாண்மைக்கு உதாரணமாக விளங்கும் இக்குளங்களின் கரைகளில், முன்னோர்களால், நுாற்றுக்கணக்கான பனைமரங்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. கற்பக விருட்சம் எனப்படும் பனை மரம், பல்வேறு பலன்களை, சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் வழங்கி வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல், இம்மரங்கள் அதிகளவு அழிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, பனை மரங்களின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அரசால், பனை விதை நடவு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
உடுமலை பகுதியில், முக்கிய நீராதாரமான ஏழு குள பாசன திட்ட குளங்களின் கரையில், இயற்கையாகவே நுாற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. குறிப்பாக, ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம் கரையில், அதிகளவு பனை மரங்கள் உள்ளன. குளங்களின் கரையில் கழிவுகளை குவித்து வைத்து தீ வைக்கின்றனர்.
மேலும், மழைக்காலங்களில், புதர்களை அகற்ற தீ வைத்தல் உள்ளிட்ட பணிகளால், பெரும்பாலான பனை மரங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. பெரியகுளம் கரையில் முன்பு, 15க்கும் மேற்பட்ட மரங்கள் கருகி, அகற்றப்படும் நிலை உருவானது.
எனவே, தற்போது வளர்ந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க, சிறப்பு திட்டங்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
குளங்களின் கரைகளில், வளரும் பனை மரங்கள், கரைகளில் மண் சரிவு தடுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், கரைகளை வலுப்படுத்தும் போது இயந்திரங்களால், பனை மரங்களின் வேர்கள் துண்டிக்கப்படாமல் பார்க்க வேண்டும்.
மேலும், புதர்களை அகற்ற தீ வைத்தல் உள்ளிட்ட பணிகளால், பனை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் மரங்களை காப்பற்ற பொதுப்பணித்துறை, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குளங்களின் கரைகளில், பனை மரங்களின் நன்மைகள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் வகையில், தகவல் பலகை வைக்கலாம்.
இரவு நேரங்களில், குளங்களின் கரைகளை ஆக்கிரமிக்கும் சமூக விரோதிகள், பனை மரங்களை காயப்படுத்துவது; அருகில் தீ வைப்பதை தவிர்க்க, கண்காணிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

