/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது! தேர்வு எளிதானதால் மாணவர் மகிழ்ச்சி
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது! தேர்வு எளிதானதால் மாணவர் மகிழ்ச்சி
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது! தேர்வு எளிதானதால் மாணவர் மகிழ்ச்சி
பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது! தேர்வு எளிதானதால் மாணவர் மகிழ்ச்சி
ADDED : மார் 06, 2025 12:34 AM

திருப்பூர்::
பிளஸ் 1 வகுப்புகளுக்கு நேற்று பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், 26 ஆயிரத்து 236 பேர் தேர்வெழுதினர்.
தமிழகத்தில், பிளஸ் 1 தேர்வு நேற்று துவங்கியது. வரும், 27ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 94 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. 221 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.
நேற்று தமிழ் தேர்வு நடந்தது; 26 ஆயிரத்து 654 பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்த நிலையில், 26 ஆயிரத்து 236 பேர் தேர்வெழுதினர்; 409 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். பிரெஞ்ச் பாட தேர்வில், 518 பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்த நிலையில், 517 பேர் தேர்வெழுதினர்.
ஹிந்தி மொழி தேர்வெழுத, 7 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில், 7 பேரும் தேர்வெழுதினர். தனித்தேர்வெழுத 384 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 273 பேர் தேர்வெழுதினர். 110 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் விஜயலட்சுமி கூறியதாவது:
பிளஸ் 1ம் வகுப்பு தமிழ் தேர்வை பொறுத்தவரை, பொதுவாகவே, ஒரு மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் உட்புறம் இருந்தே அதிகம் கேட்கப்படும்.
இம்முறையும் அதுபோன்று தான் கேட்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாணவர்கள் பதில் அளிக்கும் வகையில் தான் கேள்விகள் இருந்தன, 2, 4 மதிப்பெண் வினா மற்றும் நெடுவினாக்களும் எளிதாகவே இருந்தது.'பொருத்துக' பகுதி தொடர்பான கேள்வியில், அதற்கான விடை தேர்ந்தெடுக்கும் முறையில் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், இம்முறை, 'பொருத்துக' பகுதிக்கான வினா, நேரடியாக பதில் எழுதும் வகையில் இருந்ததால், மாணவர்கள் சற்றே திணறினர். மற்றபடி, வினாத்தாள் எளிமையானதாகவே இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.