/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலை 9:30க்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
/
காலை 9:30க்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
ADDED : மே 06, 2024 12:06 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 96 மையங்களில், பிளஸ் 2 தேர்வை 23 ஆயிரத்து, 636 மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.
இன்று காலை, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. காலை, 9:30 மணிக்கு தேர்வு முடிவுகளை, திருப்பூர்கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்டோர், மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர்.
தேர்வு முடிவு வெளியான மறுநொடியே, மாணவர்கள் அளித்த மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவு சென்று சேர்ந்து விடும். பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். கடந்தாண்டு பிளஸ் 2வில், மாநிலத்தில் இரண்டாமிடம் (97.79 சதவீதம்) பெற்ற திருப்பூர், நடப்பாண்டு முதலிடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் மேலோங்கியுள்ளது.
பதட்டம் கூடாது
முதன்மைக்கல்வி அலுவலர் கீதா கூறுகையில், 'இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. மாணவ, மாணவியர் எவ்வித பதட்டமும் அடைய கூடாது. மொழித்தாள் உள்ளிட்ட, முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்தால், அல்லது சந்தேகங்கள் இருந்தால் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளரக்கூடாது. அவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும். அடுத்த ஓரிரு மாதங்களில் தேர்வெழுதி, உயர் கல்வியை தொடர முடியும். மாணவ, மாணவியர் கவலை கொள்ள கூடாது; நிதானமாக தேர்வு முடிவை பார்க்க வேண்டும்,' என்றார்.