/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்! திருப்பூர் மாவட்டத்தில், 25,863 பேர் எழுதுகின்றனர்
/
பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்! திருப்பூர் மாவட்டத்தில், 25,863 பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்! திருப்பூர் மாவட்டத்தில், 25,863 பேர் எழுதுகின்றனர்
பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்! திருப்பூர் மாவட்டத்தில், 25,863 பேர் எழுதுகின்றனர்
ADDED : மார் 02, 2025 04:51 AM

திருப்பூர்: நாளை துவங்கவுள்ள பிளஸ் 2 தேர்வை, திருப்பூர் மாவட்டத்தில், 25 ஆயிரத்து 863 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்; மாணவர்கள், எவ்வித இடையூறுமின்றி தேர்வெழுதும் வகையிலான ஏற்பாடுகள், தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ளன.
நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு, நாளை (3ம் தேதி) துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் என, 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 25 ஆயிரத்து 863 பேர் எழுத உள்ளனர். இதில், 11 ஆயிரத்து 874 மாணவர்கள்; 13 ஆயிரத்து 989 மாணவியர் அடங்கும். தனித்தேர்வர்களாக, 379 பேர் தேர்வெழுதுகின்றனர்.
மாவட்டத்தில், 92 பள்ளிகள் தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. மாணவ, மாணவியருக்கான பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாணவர்களின் தேர்வு எண்களை ஒட்டும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களுக்கு செல்லும் வழிகாட்டியும் ஆங்காங்கே வைக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளி அருகேயுள்ள அரசுப்பள்ளிகளில் தேர்வெழுத அழைத்துச் செல்லப்படுவர். தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளி வளாகங்கள் முழுக்க துாய்மைப் பணியாளர்கள் வாயிலாக சுத்தம் செய்யப்பட்டன.
தேர்விற்கான வினாத்தாள், மாவட்டத்தில், 4 இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களுக்கு, 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; சுழற்சி முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக, 92 தலைமையாசிரியர்கள், 92 துறை அலுவலர்கள், 1,570 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியாற்றவுள்ளனர்.
தேர்வில் முறைகேடு செய்வது, காப்பி அடிப்பது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களை கண்காணிக்க, முதன்மைகல்வி அலுவலர் வாயிலாக, 150 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பு மேற்கொண்டு, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பர்.