/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! தமிழ்த் தேர்வை 'மறந்த' 277 மாணவ, மாணவியர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! தமிழ்த் தேர்வை 'மறந்த' 277 மாணவ, மாணவியர்
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! தமிழ்த் தேர்வை 'மறந்த' 277 மாணவ, மாணவியர்
பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது! தமிழ்த் தேர்வை 'மறந்த' 277 மாணவ, மாணவியர்
ADDED : மார் 04, 2025 06:36 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 94 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. தமிழ் தேர்வெழுத, 25 ஆயிரத்து, 348 மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. நேற்று தேர்வெழுத, 277 பேர் வராத நிலையில், 25 ஆயிரத்து, 71 பேர் தேர்வெழுதினர்.
மாவட்டத்தில், தனித்தேர்வெழுத விண்ணப்பித்த, 179 பேரில், 156 பேர் தேர்வெழுதினர்; 23 பேர் தேர்வுக்கு வரவில்லை. தமிழ் தவிர்த்து பிற மொழி பாடப்பிரிவில் பிரெஞ்சு தேர்வை, 497 பேரும், ஹிந்தி தேர்வை, 16 பேரும், மலையாளம் தேர்வை, இருவரும் எழுதினர். தனித்தேர்வர்களில் இருவர் அரபிக் மொழியில், தேர்வெழுதினர்.
நேற்று முதல் தேர்வு என்பதால், வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைக்க மாணவியரின் பெற்றோர் பலர் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். 'பார்த்து பொறுமையா பரீட்சை எழுதிட்டு வாம்மா; அவசரப்படாதே. பதட்டமில்லாமல் எழுது' என பெற்றோர் பலர் அறிவுரை கூறி, ஆசி வழங்கி விடைபெற்றனர்.
தேர்வுக்கு முன், இறைவணக்க கூட்டத்தில் மாணவியர் சில நிமிடம் கூட்டுபிரார்த்தனை செய்தனர். மாணவியர் சிலர் தேர்வறைக்கு செல்லும் வரை, புத்தகங்களை திருப்பி பார்த்து, படித்து கொண்டிருந்தனர். தங்கள் பள்ளிக்கு தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு, தேர்வில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து, கே.எஸ்.சி., பள்ளி தலைமைஆசிரியர் சிவக்குமார் அறிவுரை வழங்கினர்.
தேர்வறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, 'தடை செய்யப்பட்ட பகுதி' அந்நியர் நுழையக்கூடாது என அறிவிப்பு பலகை தேர்வு மைய வாயிலில் வைக்கப்பட்டிருந்தது. வரும், 6ம் தேதி பிளஸ் 2 ஆங்கிலத்தேர்வும், மார்ச் 11 முதல் முக்கியத்தேர்வுகளும் நடக்கிறது.
முன்னதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், பொதுத்தேர்வு நடத்தும் அலுவலர் குழுவினர் பங்கேற்றனர்.
மாவட்ட பொதுத்தேர்வு நடத்தும் அலுவலரும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனருமான ஆனந்தி, தாராபுரம், காங்கயம், உடுமலை உள்ளிட்ட புறநகர கல்வி மாவட்டங்களில் பொதுத்தேர்வு பணிகளை ஆய்வு செய்தார்.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க, கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், 150 ஆசிரியர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு மையம், தேர்வறைகளில் திடீர் சோதனையில் இவர்கள் ஈடுபட்டனர். நேற்று நடந்த தேர்வில் யாரும் முறைகேட்டில் ஈடுபடவில்லை என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.