பெண்ணிடம் கம்மல் பறிப்பு
பொங்லுார் அருகே கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார், 40. விவசாயி. இவரது மனைவி குமுதா. இருவரும் வெளியூர் சென்று விட்டு பல்லடம், தாராபுரம் ரோட்டில் கள்ளிப்பாளையம் நோக்கி வீட்டுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் முகத்தை மறைத்து கர்சீப் கட்டிக் கொண்டு வந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி குமுதா அணிந்திருந்த அரைப்பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்றனர். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓ.இ., மில்லில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம், ஊதியூர், கொடுவாய் பொள்ளாச்சி ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 65; ஓ.இ., மில் நடத்தி வருகின்றார். மில்லின் ஒரு பகுதியில் பஞ்சு இருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் மெஷினில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு, தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. பல்லடம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு உள்ளிட்டவை எரிந்து போனது. ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
காங்கயம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட படியூரில் போலீசார் ரோந்து மேற்கொண்டு வாகன தணிக்கை செய்தனர். சந்தேகப்படும் விதமாக இருந்த நபரிடம் விசா ரித்தனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்த அலிஷார் அலாம், 23 என்பது தெரிந்தது. விற்பனைக்கு வைத்திருந்த, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
45 கிலோ குட்கா பறிமுதல்
குன்னத்துார் - பெருமாநல்லுார் ரோட்டில் குன்னத்துார் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி விசாரித்தனர். கோவையை சேர்ந்த சுப்ரமணி, 55 என்பதும், விற்பனைக்கு 45 கிலோ குட்காவை வைத்திருந்ததும் தெரியவந்தது. குட்காவை பறிமுதல் செய்து,கைது செய்தனர்.