ADDED : ஜூலை 25, 2024 11:22 PM

திருப்பூர் : திருப்பூர் நகரின் மையப்பகுதியில் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. ஜம்மனை ஓடை, சங்கிலிப் பள்ளம், சபரி ஓடை, சேனாப் பள்ளம், மந்திரி வாய்க்கால் ஆகிய முக்கியமான நீரோடைகள் இதில் கலக்கிறது.
இயற்கையாக அமைந்த நீரோடைகளாக உள்ள நிலையிலும் நகரப் பகுதிக்குள் நுழைந்து செல்லும் காரணத்தால் இந்த நீரோடைகளில் பெருமளவு நகரின் சாக்கடை கழிவு நீர் தான் செல்கிறது.
மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இருப்பினும் விடுபட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் பல இடங்கள் இதில் இணைக்கப்படாத நிலையிலும், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வழியில்லாத இடங்களிலிருந்தும் கழிவு நீர் இவற்றில் வந்து சேருவது தவிர்க்க முடியாமல் உள்ளது.
மழைக்காலம் துவங்கிய நிலையில், ஓடைகள் துார்வாரி சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும் கழிவு நீரிலும், பொறுப்பற்ற முறையில் வடிகால்களில் வீசப்படும் பாலிதீன் கழிவுகளும் இந்த ஓடைகளில் அதிகளவில் காணப்படுகிறது.
அவ்வகையில் ஜம்மனை ஓடையில் சில இடங்களில் பாலிதீன் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என மக்காத குப்பை அதிகளவில் தேங்கிக் கிடக்கிறது. இதனால், கழிவுநீர் செல்வது தடை படுகிறது.
இது இயற்கையை பாழ்படுத்துவதோடு, நொய்யலில் சென்று சேரும் போது அங்கும் இது போன்ற கழிவுகள் தேங்கி பிரச்னைகளுக்கு வழி ஏற்படுத்துகிறது.
எனவே, ஓடைகளில் தேங்கி கிடக்கும் கழிவுகள் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

