/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளம் - குட்டை துார்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
குளம் - குட்டை துார்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : மே 10, 2024 12:48 AM
பல்லடம்;''குளம் - குட்டைகளை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அதன் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், தண்ணீர் பற்றாக்குறையால், கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, பாசனத்திற்கான நீரின்றி விவசாய தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தென்னை விவசாயம் மிகுந்த திருப்பூர், கோவை மாவட்டங்களில், தென்னைகள் கருகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எதிர்வரும் பருவ மழையை நம்பி உள்ள நிலையில், அதுவரை தென்னைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தண்ணீரை சேகரித்து வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீர் ஆதாரங்களாக உள்ள குளம் - குட்டைகளை துார்வாரி, மழை நீரை சேகரித்து வைக்க தயார்படுத்த வேண்டி உள்ளது.
எனவே, மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவற்றை துார்வார உத்தரவிட வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி, தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கோடையின் தாக்கத்திலிருந்து எப்படி தப்பிக்க உள்ளோம் என்றே தெரியாத சூழல் உள்ளது.
இதற்கிடையே, தென்னைகளை காப்பாற்றும் நோக்கில், விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான மானியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இல்லையெனில், சிறிய அளவிலான விவசாயிகள் தொழிலை விட்டு செல்லும் அபாயம் உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.