/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் ஓட்டு எண்ணிக்கை: வழிகாட்டுதல் வெளியீடு
/
தபால் ஓட்டு எண்ணிக்கை: வழிகாட்டுதல் வெளியீடு
ADDED : மே 22, 2024 12:29 AM
திருப்பூர்:ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, தபால் ஓட்டு சரிபார்ப்பு மற்றும் எண்ணிக்கை தொடர்பான வழிகாட்டுதல்களை, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, கடந்த ஏப்., 19ம் தேதி நடைபெற்றது. போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள், தங்கள் பணியிடத்திலேயே, ஏப்., மாத துவக்கம் முதல் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட தபால் ஓட்டுக்கள், லோக்சபா தொகுதிவாரியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான கலெக்டர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது; அவை, ஸ்ட்ராங் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அந்தியூர், பவானி, பெருந்துறை, கோபி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. வேட்பாளர்கள் 13 பேர் போட்டியில் உள்ளனர். லோக்சபா தொகுதியில் மொத்தம் 7 ஆயிரத்து 184 தபால் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், வரும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலாவதாக, காலை, 8:00 மணிக்கு, ஏழு டேபிள்களில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்.
தபால் ஓட்டு சரிபார்ப்பு
சர்வீஸ் வாக்காளரின் 'ஆன்லைன்' தபால் ஓட்டு (இ.டி.பி.பி.எஸ்.,), தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்களின் தபால் ஓட்டு (பி.பி.எஸ்.,) என இரண்டு வகையான தபால் ஓட்டுக்கள் உள்ளன. சர்வீஸ் வாக்காளர்களின் தபால் ஓட்டுக்களில் உள்ள க்யூ.ஆர்., குறியிடுகளை ஸ்கேன் செய்து சரிபார்க்கவேண்டும். போலி தபால் ஓட்டுக்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக புகார் அளிக்கவேண்டும்.
தபால் ஓட்டுக்களில் படிவம் 13 சி ஐ திறந்து, உறுதி மொழி படிவத்தை (படிவம் 13-ஏ) சரிபார்க்கப்படும். படிவம் 13பி உறையை பிரித்து, அதிலுள்ள ஓட்டுச்சீட்டுக்கள் தனியே எடுக்கப்படும். தபால் ஓட்டுக்களில், உறுதி மொழி படிவம் இல்லையென்றாலோ; உறுதிமொழி படிவத்தில் வாக்காளர் முறையாக கையெழுத்திடவில்லை அல்லது அதிகாரி சான்றிளிக்கவில்லை என்றாலோ தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்.
ஓட்டு எண்ணிக்கை
தகுதியான தபால் ஓட்டுக்கள், வேட்பாளர் வாரியாக பிரித்து, தலா, 50 ஓட்டுச்சீட்டு கொண்ட பண்டலாக வைக்கப்படும். இறுதியாக எண்ணப்பட்டு, வேட்பாளர்கள் பெற்ற தபால் ஓட்டு விவரம் அறிவிக்கப்படும் என, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

