/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போஸ்டர் மயமான நிழற்கூரை; காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
/
போஸ்டர் மயமான நிழற்கூரை; காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
போஸ்டர் மயமான நிழற்கூரை; காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
போஸ்டர் மயமான நிழற்கூரை; காத்திருக்கும் பயணியர் அதிருப்தி
ADDED : பிப் 24, 2025 09:40 PM

பராமரிப்பு இல்லை
உடுமலை, எலையாம்புத்தூர் பிரிவில் உள்ள பஸ் ஸ்டாப் பயன்பாடு இன்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. இதனால், பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர். போஸ்டர்களை அகற்றி, நிழற்கூரையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேல்முருகன், உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, சர்தார் வீதி எக்ஸ்டன்சன் பகுதியில் குப்பைக்கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் புகை அதிகமாக பரவுகிறது. வாகன ஓட்டுனர்கள் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
- ஜெயந்தி, உடுமலை.
சுகாதார சீர்கேடு
உடுமலை, ராஜேந்திரா ரோடு அரசு பள்ளியின் சுற்றுசுவரை திறந்த வெளிக்கழிப்பிடமாகவே மாற்றியுள்ளனர். அப்பள்ளி மாணவர்கள் மிகுதியான துர்நாற்றத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தொடர்ந்து அவ்விடம் கழிப்பிடமாக மாற்றப்பட்டு வருவதால், பள்ளி வளாகமும் துர்நாற்றம் வீச துவங்கிவிட்டது. மாணவர்களும் முகம் சுழிக்கின்றனர்.
- ராகவன், உடுமலை.
சுத்தம் செய்யணும்
உடுமலை பைபாஸ் ரோடு சுவற்றில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், அங்கு சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நகராட்சியினர் அவற்றை அகற்றி, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சோமு, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறை மீறி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் மாலை நேரங்களில் தொடர்ந்து தளிரோடு சிக்னல் முதல் குட்டைதிடல் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கும் முடியாமல் சிக்கலான நிலை தொடர்கிறது.
- விஜயன், உடுமலை.
சுகாதாரம் இல்லை
உடுமலை, மினி மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாய் திறந்தவெளிக்கழிப்பிடமாக உள்ளது. அப்பகுதி வழியாக கடந்து செல்லவும் முடியாத நிலையில் அசுத்தமாக உள்ளது. இதில் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
- ராமகிருஷ்ணன், உடுமலை.
பள்ளி முன் குப்பை
உடுமலை, சத்திரம் வீதியில் குப்பைக்கழிவுகள் அரசு பள்ளியின் முன்பு திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. இக்கழிவுகள் அப்புறப்படுத்துவதும் இல்லை. இதனால் தெருநாய்கள் அப்பகுதியில் கூட்டமாக கழிவுகளை இழுத்து பரப்புகின்றன. அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- ரவி, உடுமலை.
கால்நடைகளால் தொல்லை
பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் கால்நடைகள் ரோட்டில் உலா வருவதால், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்து அபாயம் அதிகமாக உள்ளது. எனவே, ரோட்டில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
-- டேனியல், பொள்ளாச்சி.
ரோட்டோரத்தில் 'பார்க்கிங்'
கிணத்துக்கடவு, கோவில்பாளையத்திலிருந்து நெகமம் செல்லும் ரோட்டில் சிறிது தூரத்துக்கு இருசக்கர வாகனங்கள் ரோட்டின் இருபுறமும் 'பார்க்கிங்' செய்யப்படுவதால், கனரக வாகனங்கள் ரோட்டில் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கோகுல், கோவில்பாளையம்.
புதரை அகற்ற வேண்டும்
கோவில்பாளையத்திலிருந்து, செங்குட்டைபாளையம் செல்லும் வழியில் ரோட்டின் ஓரத்தில் அதிகளவு புதர் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக, ரோட்டின் வளைவு பகுதியில் வாகனங்கள் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரோட்டோரம் உள்ள புதர்களை அகற்றம் செய்ய வேண்டும்.
-- ஆறுச்சாமி, நெகமம்.
ஆக்கிரமிப்பை அகற்றணும்
வால்பாறை காந்தி சிலை வளாகத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகே இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து, பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டும். அப்போது தான், இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.
- கவின், வால்பாறை.
உருகுலைந்த ரோடு
பொள்ளாச்சி, மின்நகர் பள்ளிவாசல் தெருவில் உள்ள ரோடு, அதிகளவு சேதமடைந்துள்ளது. இவ்வழியாகப் பயணிக்கும் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- கண்ணன் ஜெயராமன், பொள்ளாச்சி.