/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 ஆண்டாக நீடிக்கும் விசைத்தறி கூலி பிரச்னை
/
10 ஆண்டாக நீடிக்கும் விசைத்தறி கூலி பிரச்னை
ADDED : பிப் 23, 2025 02:41 AM

பல்லடம்,: பத்து ஆண்டுகளாக கூலி பிரச்னை நீடித்து வரும் நிலையில், நிரந்தர தீர்வை எதிர்நோக்கி விசைத்தறி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில், 90 சதவீதம் கூலி அடிப்படையில் தான் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. தானியங்கி தறிகள் வளர்ச்சி, மின் கட்டணம், பாவு நுால் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், விசைத்தறிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, நெசவு செய்த துணிகளுக்கான கூலியை பெறுவதிலும், விசைத்தறியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த, 2014ம் ஆண்டுக்குப் பின் ஒப்பந்த கூலி பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சோமனுாரை தலைமையிடமாகக் கொண்ட கோவை - திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை வலியுறுத்தி, சமீபத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தீர்வு ஏற்படாத நிலையில், வீடுகள் மற்றும் விசைத்தறிக்கூடங்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, விரைவில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விசைத்தறியாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
ஆலோசனை
இதேபோல், பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்ட திருப்பூர் - கோவை மாவட்ட விசைத் தறி உரிமையாளர்கள், குறைக்கப்பட்ட கூலியை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, நாளை காலை, 9.30 மணிக்கு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, கூலி உயர்வுக்காக விசைத்தறியாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூலி உயர்வை நம்பித்தான் விசைத்தறியாளர்கள் உட்பட தொழிலாளர்கள் குடும்பங்களும் உள்ளன என்பதால், கூலி பெறுவதில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை விசைத்தறியாளர்களின் எதிர்பார்ப்பு.